வேதாரண்யம்,செப்.3: ஒன்றிய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு செயலாளர் பார்த்தசாரதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது: ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை முன்மொழித்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இத்திட்ட மூலம் இந்திய திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. திட்டம் அமல்படுத்தப்பட்டால் மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறை புகுத்தப்படும். இதனால் இடைநிற்றல் அதிகரிக்கும் சமூகநீதி தடுக்கப்படும். எனவேதான் தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு புகுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசு பள்ளி கல்வி கொள்கை குறித்து தமிழக அரசிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒருங்கிணைந்த மாணவர் திட்டத்தின் (சமக்ர சிக்ஷா அபியான்) கீழ் தமிழ்நாட்டின் கல்விக்காக ஒன்றிய அரசு ரூ.2152 கோடியை ஒதுக்கியது. இது மூன்று தவணைகளாக வழங்கப்படும். முதல் தவணை ரூ.573 கோடியை கடந்த ஜூன் மாதத்திலேயே கொடுத்திருக்கவேண்டும். இதுவரை வழங்கவில்லை. இந்தி திணிப்பை எப்போதும் எதிர்க்கும் மாநிலம் தமிழ்நாடு. இப்போது வேறு பல மாநிலங்களும் இந்தித் திணிப்புக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றன. கல்வித்தொகை மறுக்கப்படுவதால் 15,000 ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் சம்பளம் வழங்க முடியாத நிலை உருவாகக்கூடும். எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வரும் லட்சக்கணக்கான மாணவர்களை இது பாதிக்கும். கல்வி கற்பிக்கும் முறையை தீர்மானிக்க மாநில அரசுக்கும் அதிகாரமும் உண்டு. நிதியை நிறுத்தி வைப்பது அநியாயமானது. கல்வி கற்கக் கூடாது என்று தடுத்த பல எத்தர்களைத் தாண்டியே தமிழ்நாடு இந்த நிலைக்கு வந்திருக்கிறது. என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும். எனவே கல்வித் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.