மதுரை, ஜூலை 27: ஒன்றிய பட்ஜெட்டில், தங்களுக்கான நலத்திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதை கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் மதுரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் உள்ள திருமலை நாயக்கர் சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரமணி, செயலாளர் பாலமுருகன், சிஐடியு மாவட்ட செயலாளர் லெனின், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜென்னியம்மாள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, ஒன்றிய பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கான நிதியை குறைத்தது, துறைக்கான பங்களிப்பில் தொடர்ந்து ஒன்றிய அரசு அலட்சியம் காண்பிடத்து வருவது உள்ளிட்டவற்றை கண்டித்து, கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது, ஒன்றிய அரசு கடந்தாண்டை விட மாற்றுத்திறனாளிகள் துறைக்கு நடப்பாண்டு நிதியை குறைத்ததை கண்டிப்பதை சுட்டிகாட்டும் விதமாக, அதற்கான ஒப்பீட்டு நகல் கிழிக்கப்பட்டது.