பெரம்பலூர்: ஒன்றிய அரசால் தடைசெய்யப் பட்ட எலி மருந்தை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :மனித உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் பல்வேறு வணிகப் பெயரில் விற்பனை செய்யப்படும் 3 சதவீத (மஞ்சள் பாஸ்பரஸ்) எலி மருந்தை வேளாண்மை மற்றும் இதர உபயோகங்களுக்கு பயன்படுத்த மத்திய அரசு முற்றிலும் தடைவிதித்துள்ளது. இந்த மருந்தானது வீட்டில் எலிகளைக் கட்டுப்படுத்த பயன் படுத்தப்படுகிறது. மேலும் இதனைக் குழந்தைகள் தவறாக உபயோகித்து விடும் அபாயம் உள்ளது. இதற்கு எதிர்வினை மருந்து இல்லை. இதனால் மத்திய, மாநில அரசுகள் இதன் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்துள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் 3 சதவீத (மஞ்சள் பாஸ்பரஸ்) எலி மருந்தை விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்தில் பயன்படுத்த வேண்டாம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பூச்சி மருந்து விற்பனை நிலையங்கள் மற்றும் இதர சில்லறை விற்பனை கடை களில் எலி மருந்து விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் அல்லது அருகில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்கள் அல்லது காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் பூச்சி மருந்து விற்பனையாளர்கள் மற்றும் இதர சில்லறை விற்பனையாளர்கள் 3 சதவீத (மஞ்சள் பாஸ்பரஸ்) எலி மருந்தை விற்பனை செய்வது தெரிய வந்தால், பூச்சி மருந்து சட்டம் 1968-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அதில் தெரிவித்துள்ளார்.