திருச்சி, ஜூன்.6: திருச்சி ஒத்தக்கடை பகுதியில் அமைந்துள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திடீர் ஆய்வு செய்து அங்கு பயின்று வந்த மாணவர்களுடன் உரையாடினார். திருச்சி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 53 வது வார்டில் குதுப்பப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில் சுமார் 200 மாணவ, மாணவிகள் அரசு போட்டி தேர்வுக்கு பயின்று வருகிறார்கள். இம்மையத்தில் நேற்று நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகள் மற்றும் அறிவு சார் மையத்தில் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் அங்கு பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த ஆய்வின் போது மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டல தலைவர் துர்கா தேவி, உதவி ஆணையர் சண்முகம், மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி முத்துசெல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.