ஒட்டன்சத்திரம், ஜூன் 11: ஒட்டன்சத்திரம் அருகே லெக்கையன்கோட்டையில் கோயில் திருவிழாவையொட்டி நடந்த எருது விடும் நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள லெக்கையன்கோட்டையில் மாதவகுல நாலுகம்பம் தாத்தைய சுவாமி கோயிலில் 2 நாட்கள் கும்பிடு பெருவிழா நடைபெற்றது. முதல் நாள் திருவிழாவில் பெருமாள் கோயிலில் இருந்து சலுகை மாடுகளை அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தேவராட்டம், சேவையாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இரண்டாவது நாள் திருவிழாவாக நேற்று முன்தினம் கொத்து கொம்பு நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், தொடர்ந்து எருது விடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 9 ஆண்டு இடைவெளிக்கு பின் நடந்த இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல், தேனி, கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 46 கிராமங்களை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, எருது விடும் நிகழ்ச்சியை கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செல்லச்சாமி, சுருளி மணி, ராஜகோபால், விநாயகம், நாகராஜ், வரதராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.