ஓமலூர், ஆக.14: ஒடிசாவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து, 3 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். ஒடிசாவில் இருந்து சேலத்திற்கு ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், நடவடிக்கை எடுக்குமாறு மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். இதன்பேரில், இரும்பாலை மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் சேலம் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அப்போது, அங்கு வந்து நின்ற ரயிலில் இருந்து இறங்கிய வாலிபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார், அவரை பின்தொடர்ந்தனர்.
அப்போது, மற்றொரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்து ரயிலில் இருந்து இறங்கிச் சென்ற வாலிபரை அழைத்துச் சென்றார். இருவரையும் துரத்திச் சென்ற போலீசார் இளம்பிள்ளை பகுதியில் மடக்கி பிடித்து சோதனையிட்டனர்.இதில், அவர்கள் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தியது தெரிய வந்தது. விசாரணையில், அவர்கள் ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தைச் சேர்ந்த சுனில்குமார் சாகு, லிப்பு ரஞ்சன்தாஸ் என்பது தெரிய வந்தது. இருவரும், இளம்பிள்ளையில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்துள்ளனர். ஒடிசாவில் இருந்து அடிக்கடி ரயிலில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்தது தெரிய வந்தது. உடனே, 2 பேரையும் கைது செய்த போலீசார் 3 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். பின்னர், சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையிலடைத்தனர்.