கிருஷ்ணகிரி, ஆக.29: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளில் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம், ஐ.ஜி பவானீஸ்வரி தலைமையில் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு தரநிலைகளை உறுதி செய்வதற்காக, குழுக்கள் அமைத்து ஆய்வு மேற்கொள்வதற்கான கலந்தாய்வு கூட்டம், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள சுற்றுலா மாளிகையில் நடந்தது. கூட்டத்திற்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், போலீஸ் ஐ.ஜி பவானீஸ்வரி, சமூக பாதுகாப்பு ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். கலெக்டர் சரயு முன்னிலை வகித்தார். கூட்டம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளி பயிற்சி முகாமில், மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, சம்மந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அவர்களின் பெற்றோர்களின் நலன் மற்றும் மறுவாழ்வை உறுதி செய்யவும், இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுத்து உரிய பரிந்துரைகள் அளித்திட பல்நோக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் சமூக ஆதரவு வாழ்வியலை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு தர நிலைகளை உறுதி செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு இந்த கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த கூட்டத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை இயக்குனர், பள்ளி கல்வித்துறை இயக்குனர், மனநல மருத்துவர், மனநல ஆலோசகர் மற்றும் குழந்தை பாதுகாப்பு ஆர்வலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.