பூந்தமல்லி, ஜூன் 20: கோவை, உக்கடத்தில் கடந்த 2022ம் ஆண்டு கார் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் அந்த காரை ஓட்டி வந்த ஜமோஷா முபீன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் 18 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை குனியமுத்தூர் பகுதியில் இயங்கி வந்த தனியார் அரபி கல்லூரியில் கடந்த 2023ம் ஆண்டு சோதனை நடத்தியதில் கல்லூரியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு தொடர்பான ஆவணங்கள் கிடைத்தன. மேலும் மாணவர்களை மூளைச்சலவை செய்து அந்த அமைப்பில் சேர்ப்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அரபிக் கல்லூரியின் முதல்வரான அகமது அலி, அங்கு பணிபுரிந்த ஊழியர் ஜவகர் சாதிக் ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
தொடர்ந்து சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த ஷேக் தாவூத், திண்டுக்கல்லை சேர்ந்த ராஜா முகமது ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் . இதையடுத்து நேற்று 4 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னைக்கு அழைத்து வந்து பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மலர்வழி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி 4 பேரையும் ஜூலை 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 4 பேரையும் புழல் சிறையில் அடைக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.