சென்னை, செப்.3: சென்னை உயர் நீதிமன்றத்தின் 5வது நுழைவாயில் (எஸ்பிளனேட் காவல் நிலையம் அருகே) அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தை ஒட்டி பல கடைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், அதனால் பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் கூறி, வழக்கறிஞர் எம்.டி.அருணன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ரயில் நிலையத்தின் பெயருக்கு முன்னால் பெரிய எழுத்துக்களுடன் தனியார் நிறுவனத்தில் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான இந்த பெயரை முறையாக அமைக்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வு, 4 வாரங்களில் பதிலளிக்குமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.