திருமங்கலம், ஜூன் 6: டோல்கேட் கட்டணம் வசூலிக்க ஐகோர்ட் கிளை தடை விதித்ததை தொடர்ந்து. எலியார்பத்தி டோல்கேட்டில் சுங்க கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டது. மதுரை – தூத்துக்குடி இடையிலான நான்கு வழிச்சாலையில் எலியார்பத்தி, தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியாபுரம் ஆகிய இரண்டு இடங்களில் டோல்கேட்கள் அமைக்கப்பட்டுள்ளன. டோல்கேட்டில் சுங்க கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனம், அடிப்படை கட்டமைப்புகள் வசதிகள் எதுவும் செய்யவில்லை. இந்த பணிகளை மேற்கொள்ளாமல் விதிகளை மீறி டோல்கேட்டில் கட்டணம் வசூலிப்பதாக தூத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடந்தார்.
இதனை தொடர்ந்து போதுமான கட்டமைப்பு வசதிகளை செய்து தராததால், மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள 2 டோல்கேட்களிலும் வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவு நகல் தங்களுக்கு வந்து சேரவில்லை என்று கூறிய டோல்கேட் நிர்வாகம், எலியார்பத்தி டோல்கேட்டில் நேற்று முன்தினம் வழக்கம்போல் வாகனங்களில் சுங்க கட்டணம் வசூலித்தனர். இதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று முன்தினம் மாலையில் ஐகோர்ட் உத்தரவின் ஆணை கிடைத்ததை தொடர்ந்து நள்ளிரவு முதல் எலியார்பத்தி டோல்கேட்டில் சுங்க கட்டண வசூல் நிறுத்தப்பட்டது. இதனால் இந்த சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும், டோல்கேட்டில் கட்டணம் செலுத்தாமல் தடையின்றி சென்று வருகின்றன.