சென்னை, மே 21: சென்னையில் 2011ம் ஆண்டு வீட்டின் அருகே மாயமான ஒன்றரை வயது குழந்தையின் உருவத்தை வைத்து, நீதிமன்ற உத்தரவுப்படி செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் 14 வயதில் அவரது தோற்றத்தை வரைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சாலிகிராமம் மஜித் நகர் வலம்புரி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த கணேஷ். இவரது ஒன்றரை வயது பெண் குழந்தை கவிதா கடந்த 19.9.2011ம் ஆண்டு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். பிறகு திடீரென குழந்தை மாயமாகியது. குழந்தையின் பெற்றோர் வீடு மற்றும் அப்பகுதி முழுவதும் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.
பிறகு மாயமான குழந்தையை கண்டுபிடித்து தரும்படி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் குழந்தையின் தந்தை கணேஷ் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் மாயமான குழந்தையின் ஒன்றரை வயது குழந்தையின் புகைப்படத்தை வைத்து விசாரணை நடத்தினர். ஆனால் குழந்தையை காணவில்லை. இதற்கிடையே இந்த வழக்கு தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேநேரம், தனது குழந்தையை கண்டுபிடித்து தரும்படி அவரது பெற்றோர் அடிக்கடி நேரில் சென்று போலீசாரிடம் ‘எங்கள் மகள் ஒரு நாள் கண்டிப்பாக எங்களுக்கு கிடைப்பார்’ என்று உறுதியாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதேநேரம் மாயமான தங்களது மகள் கவிதாவை கண்டுபிடித்து தரும்படி காவல்துறைக்கு உத்தரவிட கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கணேஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சந்தோஷ் முன்பு கடந்த ஜனவரி 5ம் ேததி விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களை தொடர்ந்து, நீதிபதி சந்தோஷ், காவல்துறை குழந்தையின் புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் 14 வயதில் அவர் எப்படி இருப்பார் என்று புகைப்படம் வரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதைதொடர்ந்து ெபண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் ஒன்றரை வயதில் கவிதாவின் புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் 13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 14 வயதில் கவிதா எப்படி இருப்பார் என்று தத்ரூபமாக உத்தேசமான புகைப்படம் வரைந்துள்ளனர். அந்த புகைப்படத்தை கவிதாவின் பெற்றோரிடம் போலீசார் கொடுத்துள்ளனர். அதை பார்த்து மாயமான சிறுமியின் பெற்றோர் கண்கலங்கினர்.
பின்னர் ஒன்றரை வயதில் மாயமான கவிதாவின் புகைப்படம் மற்றும் தற்போது 14 வயதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உத்தேசமாக உருவாக்கப்பட்ட புகைப்படத்தை ஒன்றாக வைத்து பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு 13 ஆண்டுகள் கடந்த பிறகும் மாயமான தனது மகள் கவிதாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி வருகின்றனர். குழந்தை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் காவல்துறைக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அந்த புகைப்படத்தின் கீழ் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு மாயமான ஒன்றரை வயது பெண் குழந்தையை 13 ஆண்டுகள் கடந்து நீதிமன்றத்தை நாடி அவரது ெபற்றோர் தேடி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.