ஊட்டி, நவ.21: ஊட்டி அபுபாபஜி டிரஸ்டில் ஏழை எளிய மக்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது. ஊட்டியில் அபுபாபாஜி டிரஸ்ட் உள்ளது. இந்த டிரஸ்ட் மூலம் ஏழை எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், மருத்துவ தேவைகளுக்கும் உதவி வருகிறது. இதுதவிர மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உதவி செய்து வருகிறது. ஏழை மக்கள் பலருக்கும் வீடுகள் கட்டி கொடுத்துளளது. மேலும், நாள் தோறும் ஏழை எளிய மக்களுக்கும், நாடோடிகளுக்கும் இலவசமாக மதிய உணவு வழங்கி வந்தது.
கொரோனா காலத்தில் இத்திட்டம் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மீண்டும் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் நேற்று துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அபுபாபாஜி டிரஸ்ட் நிர்வாகி விமல் சவேரி தலைமை வகித்தார். மூத்த வக்கீல் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு இந்த உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். இதில், அபுபாபாஜி டிரஸ்ட் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.