நன்றி குங்குமம் டாக்டர் ;; ;பெரும்பாலும் ஆரோக்கியத்துடனே இந்த உலகுக்கு வருகிறோம். நாளடைவில் பல நோய்களுக்கு நம் வாழ்வியல் முறைகளாலோ அல்லது உணவுப்பழக்கங்களாலோ ஆளாகிவிடுகிறோம். ஆனால், அனைவரது ஆசையும், ஆர்வமும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே. இதில் வயது வித்தியாசமோ, தாழ்ந்தோர் மேலோர் வித்தியாசமோ இல்லை….ஆரோக்கியம் என்றால் என்ன? அனைவரும் பயன்படுத்தும் ஆரோக்கியம் என்ற சொல்பதத்திற்கு ‘ஆரோக்கிய பாவம்’ என்பதே விரிவான அர்த்தம். அப்படியென்றால் ரோகம் என்றால் நோய்… அதற்கு எதிர்ப்பதம் ஆரோக்கியம். அதாவது ‘நோயில்லா நிலை’ என்றே பொருள்.‘நோயில்லா நிலை’ என்ற ரோகம் என்பது உடலளவிலும் உள்ளத்து அளவிலும் குறைபாடுகள், தொந்தரவுகள் இல்லாமல் இருக்க வேண்டும். இது அனைவருக்கும் இருக்கிறதா என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறி. அப்போது நோயில்லா நிலையென்றால் என்ன? முதலில் நம் உடல் எந்த உட்காரணிகளாலும் நோய்த்தாக்கத்துக்கு ஆளாகக் கூடாது. உதாரணத்துக்கு வாதம், பித்தம், கபம் போன்ற மூன்று தோஷங்களால் ஏற்படக்கூடாது. இது உணவினாலும், பழக்க வழக்கத்தாலும், மன உளைச்சலாலும் ஏற்படும். இரண்டாவதாக நோய் என்பது வெளிப்புறக் காரணிகளால் ஏற்படக்கூடாது. ஆயுர்வேதம் இந்த இரண்டு வகையோடு மட்டுமே நோய்த்தாக்கம் பற்றிய குறிப்பை நிறுத்தி விடவில்லை. இன்னும் ஆழ்ந்து சிந்தித்து பல்வேறு காரணங்களால் பிணி என்பது ஏழு வகைப்படும் என்றும், அவை ஒவ்வொன்றும் இரண்டு வகைப்படும் என்றும் மிகத் தெளிவாக விளக்கி கூறியுள்ளது.(1) பிறவியிலேயே ஏற்படும் நோய்கள் : (அ) விந்தணுவில் ஏற்படுகிற நோய் (ஆ) பெண் அண்டத்தால் ஏற்படுகிற நோய்.(2) கர்ப்பத்தில் ஏற்படுகிற நோய்: (அ) உணவால் ஏற்படுகிற நோய், (ஆ) மனதால் ஏற்படுகிற நோய்.(3) பிறந்தபின் ஏற்படும் நோய்: (அ) அதிக ஊட்டச்சத்துவால் ஏற்படுகிற நோய், (ஆ) ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படுகிற நோய்.(4) காயம் போன்றவற்றால் ஏற்படும் நோய்கள்: (அ) அடிபடுவதால் ஏற்படுகிற நோய், (ஆ) மற்றவர்கள் ஏற்படுத்தும் மனக்காயம், கோபம் போன்றவற்றால் ஏற்படுகிற நோய்.(5) பருவங்களால் ஏற்படும் நோய்கள்: (அ) பருவ கோளாறினால் ஏற்படும் ேநாய்கள், (ஆ) பருவக்காலத்தில் ஏற்படும் காற்று மாசு, நீர் மாசுவினால் கேடடைந்து அதனால் ஏற்படும் நோய்.(6) தெய்வக்குற்றம், சாபம் போன்றவற்றால் ஏற்படுகிற நோய்: (அ) அதர்ம வழியில் வாழ்க்கை மேற்கொண்டு அதனால் ஏற்படும் நோய். (ஆ) பில்லி சூன்யம், சாபம் போன்றவற்றால் ஏற்படும் நோய்.(7) பசி, தாகம் போன்ற இயற்கையால் ஏற்படும் நோய்: (அ) உடலை நன்கு பேணிக்காத்தும் காலத்தினால் ஏற்படும் நோய்கள், (ஆ) காலத்தினால் அல்லாது, ஒருவர் தான் செய்யும் குற்றங்களினால் ஏற்படுவது.மேற்கண்ட ஏழு வகை பிரிவுகளிலும் உட்பிரிவு இருவகை பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 14 வகை பிரிவுகளை பொதுவாக இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. அவை:(1) இப்பிறவியால் செய்கிற தவறினால் ஏற்படக் கூடியவை. மற்றொன்று முற்பிறவியில் செய்த வினையால் ஏற்படுகிறவை. தற்போது பல நோய்களுக்கு காரணம் என்னஎன்று தெரியாமல் மருத்துவ உலகமே திகைப்பில் ஆழ்கிறது. நோயாளிகளும் குழம்பிப் போகிறார்கள். நான் எந்த தவறுமே செய்யவில்லை. ஆனால், எனக்கு இந்த நோய் வந்துவிட்டது என அங்கலாய்த்துக் கொள்ளும் பலரைப் பார்க்க முடியும். நவீன மருத்துவ முறையும் இதனை யூகிக்க முடியாத நோய் என்கிறது. ஆயுர்வேதம் இதுபோன்ற நோய்களை ‘விதி ஸம்பிராப்தி’ என்று குறிப்பிடுகிறது. நோயின் வகைகளில் முற்பிறவியால் செய்த வினையால் ஏற்படும் நோய் வகைகளாக இது அறியப்படுகிறது. எனவே, ஆரோக்கியம் என்ற நோயில்லா நிலையை ஒருவர் அடைய வேண்டும் என்றால், அவர் மேற்கண்ட வகைகள் எதனாலும் எதுவும் பாதிக்கப்பட்டிருக்கக் கூடாது. இது எப்படி சாத்தியம்… ரொம்பவும் கஷ்டம் என்று தோன்றுகிறது அல்லவா? ஆனால், அப்படி எல்லாம் கஷ்டம் என்று கவலைப்பட வேண்டியது இல்லை. ஆயுர்வேத மருத்துவ முறையை பின்பற்றினால் நோயிலிருந்து விடுபட்டு முழுமையான ஆரோக்கிய வாழ்வை பெற முடியும். உடலளவிலும், மனதளவிலும், சமூக அளவிலும் ஒரு மனிதனின் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும். அதுவே ஆரோக்கியம் என்று உலக சுகாதார நிறுவனம் வரையறுக்கிறது. இதனை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்திய மருத்துவத்தின் அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர் மிகத் தெளிவாக விளக்கிச் சென்றுள்ளார். அதாவது, சீரான உடலின் செயல், ஜீரண சக்தி கட்டமைப்பு, மலம் மற்றும் ஜலம் வெளியேறுதல், சந்தோஷமான ஆத்மா, ஐம்புலன்கள், மனநிலை என இதுபற்றி அன்றே சொல்லிவிட்டார் சுஷ்ருதர். இதில் ஏதேனும் ஒன்று பாதிக்கப்பட்டால் கீழே உள்ள அடுத்த ஏதாவது ஒரு நிலை பாதிக்கப்படும். ஏனெனில் உடலும், மனமும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது; இணை பிரியாதது. எனவே, ஒன்று பாதிக்கப்பட்டால் மற்றொன்றும் பாதிக்கப்படும். இரண்டும் சேர்ந்து பாதிக்கப்பட்டால் சமூக அளவில் நாம் நலமாக இருக்க முடியாது. அப்படியெனில் ஆரோக்கியம் என்பது எதுவரை…‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற எண்ணம் தோன்றும் வரை. ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’. என்ற எண்ணம் ஏற்படும் வரை. பசியிருக்கும்போதே புசிப்பேன். அஜீரணம் இருக்கும்போது உண்ண மாட்டேன் என்ற எண்ணம் உண்டாகும் வரை. பொறாமை, கோபம் தவிர்க்கும் வரை. அதிக ஆசை, ஆக்க சிந்தனை, மன உளைச்சல் போன்றவைகளை தடுக்கும்வரை, ஆழ்ந்த உறக்கத்தை குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் மேற்கொள்வேன் என்ற எண்ணம் உண்டாகும் வரை. மற்றவர்களை கெடுக்கும் எண்ணம் இல்லாதிருக்கும் வரை. இயற்கை உபாதைகளை தடுக்காத வரை. பருவத்திற்கு ஏற்ப வாழ்க்கை நடைமுறைகளை மாற்றிக் கொள்ளாத வரை…..மேற்கண்டவற்றை எதையும் பின்பற்றாதவரை ஆரோக்கியம் என்ற ‘நோயில்லா நிலை’ ஏற்படாது. எனவே கூடுமானவரை முடிந்தளவுக்கு மேற்கண்டவற்றை பின்பற்றினால் நிச்சயம். ஆரோக்கியம் என்ற நோயற்ற நிலையை நம்மால் அடையவும் முடியும்!– வி.ஒவியா
ஏழு வகை பிணிகள்
96
previous post