பாகூர், ஜூலை 1: புதுச்சேரி அருகே ஏலச்சீட்டு நடத்திய பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் அடுத்த மஞ்சக்குப்பம் பாண்டி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுகன் (36). இவரது அம்மா சுமதி (56). இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். அதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஏலச்சீட்டு கட்டி வந்தவர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் போனதால், சுமதிக்கும் அவர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏலச்சீட்டில் பணம் கட்டியவர்கள் கடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தன் பேரில் சுமதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தற்போது நிலுவையில் இருந்து வருகிறது.இந்நிலையில் சுமதியின் சொந்த ஊரான கிருமாம்பாக்கம் அடுத்த மணப்பட்டு பகுதிக்கு வந்து அங்கு கடந்த 5 நாட்களாக தங்கி இருந்துள்ளார்.
அங்கும் சிலர் வந்து சுமதியிடம் ஏலச்சீட்டு பணத்தை கேட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் சுமதி மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வெகு நேரமாகியும் சுமதி வீட்டிலிருந்து வெளியே வராததால், அவரது உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சுமதி நைலான் கயிற்றால் தூக்கு மாட்டி சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து தகவலறிந்ததும் கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.