நன்றி குங்குமம் தோழி பொள்ளாச்சி பயங்கரம்பெண்கள் பலர் பொள்ளாச்சியில் வன்கொடுமைக்கு ஆளான விவகாரம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு கும்பல் தங்களது கேளிக்கைக்காகவும், மிரட்டிப் பணம் பறிக்கவும், அதிகாரம் படைத்தவர்களின் நுகர்வுக்காகவும் பெண்களை மிகக் கொடூரமாக வதைத்திருக்கிறது. ஏழு ஆண்டுகள் யாரிடத்திலும் மாட்டிக் கொள்ளாமல் இவர்களால் இந்தக் குற்றச் செயலை செய்ய முடிந்திருக்கிறது என்றால் இவர்களுக்குப் பின்னால் மிகப் பெரும் வலைப்பின்னல் இருப்பது வெட்ட வெளிச்சம். இச்சம்பவத்தினால் பலர் கொந்தளிப்புடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், தொடர்புடைய குற்றவாளிகள் தப்பித்துவிடக் கூடாதெனவும் முனைப்புடன் போராடி வருகின்றனர்.தங்கள் பிள்ளைகள் தன் வீட்டில் வந்து எதையாவது சொன்னால் அவர்களையே சந்தேகித்து குற்றவாளியாக்கி மிரட்டுகிற வினோதமான சமூகம் நம்முடையது. இந்த அச்சத்தையே பாலியல் சைக்கோக்கள் ஆயுதமாக்கி இருக்கிறார்கள். இவர்கள் காத்திருந்து பெண்களை வலைவிரித்து அவர்களிடம் இயல்பாகப் பழகி அவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக தங்களை காண்பித்து, அடுத்தடுத்து காய்களை நகர்த்தியிருக்கிறார்கள் என்கிறார் பொள்ளாச்சியிலே பிறந்து வளர்ந்து பட்டப்படிப்பை முடித்த, வழக்கறிஞர் சித்ரா விஜயேஸ்வரி. ‘‘நான் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாமே இங்குதான்.கோவையில் வழக்கறிஞருக்கு படித்த நிலையில் திருமணம் முடிந்தது. சொந்த ஊரான பொள்ளாச்சியில் வழக்கறிஞராக இருக்கிறேன். பொள்ளாச்சி மிகவும் அழகான அமைதியான ஊர். இப்போது ஒரு மாதமாகவே ஊரில் கூக்குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. எங்கள் மனம் மரத்துப்போய் இருக்கிறது. இது ஒரே நாளில் வந்த செய்தி இல்லை. பல வருடங்களாக அமுக்கி அமுக்கி வைத்து வெடித்த விசயம். பிரச்னையின் துவக்கத்திலேயே இதை கையில் எடுத்திருந்தால் இவ்வளவு ஆழமாக வேறூன்றி இருக்காது. நம் ஊரில் இப்படி ஒன்று நடந்திருக்கா? அதற்கான வாய்ப்பு இருக்கா? இதை நம்பவே ஒரு வாரம் பிடித்தது.பொள்ளாச்சி பாலியல் தொடர்பான மார்பிங் செய்யப்படாத வீடியோவை நானும் என்னோடு பணிபுரியும் வழக்கறிஞர் நண்பர்களும் பார்த்தோம். ஒரு பெண்ணை அடித்து மிரட்டி பயமுறுத்தி இம்சை செய்யும் நிகழ்வை பார்த்தால் எப்படி இருக்கும். பத்து நாள் தாங்கவே முடியாத மன அழுத்தத்தில் இருந்தோம். சாப்பிட முடியல, தூங்க முடியல. வீடியோக்களில் பெண்கள் கதறுகின்றனர், ஓலமிடுகின்றனர். மனித மிருகங்கள், காட்டுமிராண்டி கூட்டத்திற்கு நடுவில் வாழ்கிறோமே என்ற அச்சம் வந்தது. அந்தக் கூட்டம் நம் ஊரைச் சேர்ந்தவர்கள் என்றதும் ரொம்பவும் வலித்தது. பல குற்ற வழக்குகளைப் பார்த்த வழக்கறிஞர்களான எங்களுக்கே மனதளவில் மிகப்பெரும் பாதிப்பும் அழுத்தமும் இருந்தது.எல்லா ஊர்களிலும் காதல் இருக்கு. ஆண், பெண் நண்பர்கள் சந்திக்கிறார்கள். பிடித்திருந்தால் கல்யாணம் என அடுத்தடுத்த நிலைக்குப் போகிறார்கள். ஒரு ஆணை நம்பித்தானே பெண் வெளியில் வருகிறாள். அவனுக்கு பின்னால் இத்தனை பெரிய சதித் திட்டம் இருக்கும் என்பது எப்படித் தெரியும். ஆறு மாதம், ஒரு வருடம் எனப் பழகி, நிறைய நம்ப வைத்து, நம்பிக்கையினை வரவழைத்து, பிறகு இம்மாதிரியான விசயங்களை அரங்கேற்றி இருக்கிறார்கள். விரும்பியவனை நம்பிச் செல்லும் பெண்களை நால்வர் ஐவராக இணைந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து அதைப் படம் பிடித்திருக்கிறார்கள். மனசாட்சி இன்றி மீம்ஸ் கிரியேட்டர்கள் அந்தப் பெண்களை ‘யூஸ்டு பீஸ்’, ‘டேமேஜ் பீஸ்’ன்னு கிரியேட் பண்றாங்க.வீடியோவை நண்பர்களுக்கு பார்வேடு செய்கிறார்கள். மார்ஃபிங் செய்யாத வீடியோக்களை மனசாட்சி இன்றி சமூக ஊடகங்களில் பரப்புகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை? சம்பந்தப்பட்ட பெண்ணோ, அவர்கள் குடும்பமோ அல்லது சின்ன குழந்தைகளோ பார்க்க நேர்ந்தால்? குற்றவாளிகள் செய்வதற்கும் அதை வெளியிட்டு பகிர்பவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. சிலர் ஏன் அவனோடு காரில் ஏறிச் சென்றார்கள்? ஏன் அவன் கூப்பிட்ட இடத்திற்கு போனார்கள்? என்று மனசாட்சியே இல்லாமல் கேட்கிறார்கள். ஒருவனை நம்பிச் சென்றதால் பெண்ணிற்கு இத்தனை பெரிய கொடுமை நடக்க வேண்டுமா?அப்படி என்றால் உங்கள் வீட்டு ஆண் பிள்ளைகளை என்னவாக வளர்த்து வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்வி எழுகிறது. வீடியோவைக் காட்டி, மிரட்டி மிரட்டியே பணத்தை பறித்திருக்கிறார்கள். வீடியோ எடுப்பதுதான் பெண்களை பணிய வைக்க சுலபமான வழி என இந்த கூட்டம் நம்பத் தொடங்கிவிட்டது. இதனால் இத்தனை ஆண்டுகள் இது ஆழமாக வேறூன்றி நடந்திருக்கிறது. குற்றவாளிகள் குறிவைத்தவர்கள் பணம் பறிக்க வசதியான வீட்டுப் பெண்கள், காரியங்களை சாதிக்க அழகான பெண்கள் எனத் தேர்வு செய்து, பல திட்டங்களோடு கூட்டாக செயல்பட்டிருக்கிறார்கள். அம்மா, உறவினர் என சில பெண்களை அறிமுகம் செய்து நம்ப வைத்ததன் மூலம் இதில் பெண் குற்றவாளிகளும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இப்பிரச்சனை எல்லோரும் பேச்சுபொருளாக மாறியதால், பெண்களுக்கும் , பெற்றோர்களுக்கும் மிகப்பெரும் அழுத்தம். பொள்ளாச்சி பெண்கள் அனைவரையுமே தவறானவர்களாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இனி பெண்களை வெளியில் விடவே பெற்றோர் பயப்படுவார்கள். கல்லூரி முடித்ததுமே திருமணத்தை செய்து வைக்கும் மனோநிலை பலரிடத்தில் உருவாகியுள்ளது. சில திருமணங்களும் தடைபட்டிருக்கு. இனி பொள்ளாச்சி என்றால் பையன், பெண் இரண்டுமே வேண்டாம் எனச் சொல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விசயத்தைப் பேசும் போது எதிரில் இருப்பவரின் முகம் மாறினால், ஏன் உன் முகம் மாறுது, உனக்கு இதில் பாதிப்பு இருக்கா எனக் கேட்கும் நிலையும் இருக்கிறது.எந்த ஒரு வேதனைக்கும் காலம்தான் மருந்து. இதைவிட ஒரு பெரிய விளைவு நேரும்போது இது கடந்து போகும். இந்த விசயம் வெளியில் வந்ததில் ஒரே நிம்மதி, உங்கள் வீடியோக்களை வெளியில் விட்டுடுவோம் என்று பயமுறுத்தி அந்தப் பெண்களை சித்ரவதை செய்த நிலைக்கு முற்றுப்புள்ளி விழுந்திருக்கிறது. இந்த விசயத்தில் ரகசியம் பாதுகாக்கப்பட்டு மிகவும் நம்பகத் தன்மையோடு இருந்திருந்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், குடும்பத்தினர் கொஞ்சம் கொஞ்சமாக தானாகவே முன் வந்து குற்றத்தை புகாராகப் பதிவு செய்திருப்பார்கள். காவல்துறை பெண்கள் வெளியில் வர அச்சப்படும் நிலையை உருவாக்கிவிட்டது.வழக்கைப் பொறுத்தவரை அனைவரும் நேர்மையாகச் செயல்பட்டால் மட்டுமே குற்றவாளிகள் பிடிபட்டு சட்டத்தின் முன் நிறுத்தி சரியான தண்டனை பெற்றுத்தர முடியும். தப்பு செய்தவர்களுக்கு பாடமாகவும், இனி தவறுகள் நடக்காமல் இருக்க எடுத்துக்காட்டாகவும் இருக்கும். நடக்கும் ஆர்ப்பாட்டம் போராட்டம் எல்லாமே அரசியலை வைத்து நகர்த்தப்படுகிறது என்கிற சந்தேகம் எழுகிறது. போன வாரம் இருந்த பரபரப்பு இந்த வாரம் இல்லை. பிரச்சனை நீர்த்துப்போன பிறகு, சரியான ஆதாரம் இல்லை என குற்றவாளிகள் வெளியில் வரத்தான் போகிறார்கள். இதில் பலமான பெண், பலவீனமான பெண் என்பதெல்லாம் கிடையாது.இதில் முழுக்க முழுக்க மிரட்டலே நடந்திருக்கு. எந்த அளவிற்கு என்றால் முழு நிர்வாணமாக நிற்கவைத்து, மிகக் கொடூரமாக பெல்ட்டால் உடல் உறுப்புக்களில் அடித்து, 8 பேர், 10 பேர் என்றெல்லாம் கும்பலாக அதில் இருக்கிறார்கள். இதில் அரசியல், பணம், அதிகாரம் எல்லாம் இணைந்து விளையாடியிருக்கு என்கிறார்கள். குற்றவாளிகளுக்குப் பின்னால் மிகப் பெரிய கும்பலின் சதி இருக்கக்கூடும். கோடிக் கணக்கில் பணமும் புரண்டிருக்கலாமோ என்ற ஐயமும் எழுகிறது’’ என முடித்தார், வழக்கறிஞர் சித்ரா விஜயேஸ்வரி. வீடியோவை வெளியிட்டால், புகைப்படத்தை இணையத்தில் பரவவிட்டால் வீட்டில் இருப்பவர்கள் நிலை, சமூகம் தன்னை என்ன நினைக்கும் என்கிற அச்சம் பெண்களை முடக்கியுள்ளது. பெண்களின் நிலை, ஆண்களின் இத்தகைய வக்ர மனோநிலை குறித்து பல்வேறு தரப்பினரிடம் பேசியதில்…அருள் மொழி, வழக்கறிஞர்‘‘பாலியல் ரீதியிலான வன்முறைக்கு இணங்க வைப்பதற்காக ஒரு இளம் பெண்ணை பெல்ட்டால் அடிப்பதும் அந்தப் பெண் அடிக்க வேண்டாமென கெஞ்சுவதும் இதெல்லாம் ஒரு சாதாரண மனிதன் செய்யக் கூடியதுதானா என்கிற அச்சத்தை பொள்ளாச்சி சம்பவம் உருவாக்குகிறது. எதிர்பாலினத்தின் மீதான பாலியல் இச்சை, காதல் இதுவெல்லாம் இயல்பான விஷயங்கள். இவை எந்தப் புள்ளியில் சாடிஸமாக மாறுகிறது. பேசாமலே இருப்பதற்கும், பேச பயப்படுவதற்குமான நிலைதான் இது. இதில் சமூகத்தோட ஒத்துழைப்பும் தேவை. நாம் கொடுக்கும் ஒத்துழைப்பே இந்த மாதிரி குற்றவாளிகளை தண்டிக்க வழிவகுக்கும். இந்த நம்பிக்கையை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கொடுத்தால் போதும். தனக்கு நடந்த கொடுமையை ஏன் தன் வீட்டில் சொல்ல முடிவதில்லை. தவறி சொல்லிவிட்டால் வீட்டில் நடப்பதைவிட குற்றவாளி மிரட்டுவதே மேல் எனும் நிலைக்கு பெண் ஏன் தள்ளப்படுகிறாள். பெண்களுக்கு நான் சொல்ல விரும்புவது… உங்களை ஆண்களிடம் குழந்தை மாதிரி காட்ட முயற்சிக்காதீர்கள். இது அறிவு கோளாறு அல்லது மனவளர்ச்சி அற்ற தன்மையின் அடையாளம்.எதற்காக சலுகையை எதிர்பார்க்கிறீர்கள்? பெண் உடல், அழகு சாதனம் கிடையாது. வசதி சார்ந்த விசயங்களையும், அழகு சார்ந்த விசயங்களையும் சமூகம் பெண்கள் மீது கட்டமைத்திருப்பதை உணர்ந்து அதை முதலில் உடைத்தெரியுங்கள். பெண்கள் சமூகத்தின் தலைவியாக இருந்தவர்கள். வேட்டையாடுகிற பெண்களாக இருந்தவர்கள். உடல் வலிமை போனாலும், சமூகம் வாழ வழிநடத்தும் வழிகாட்டியாக இருந்தவர்கள். ஆணை தன் வழியில் நடக்கும் நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பை துணிச்சலோடு எடுத்து நடத்துகிற அறிவை, ஆற்றலை, திறமையை, உழைப்பை உறுதி செய்யுங்கள்.’’ஓவியா, பெண்ணியச் செயற்பாட்டாளர்‘‘பெண் குழந்தைகளுக்கு நான் சொல்ல விரும்புவது. தயவுசெய்து பயப்படாதீர்கள். உங்கள் உடம்பைப் பற்றி என்ன செய்தி வெளிவந்தாலும், உங்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை வெளிவந்தாலும், உங்கள் உடம்பே வெளிக்காட்டப்பட்டாலும், நீங்கள் குற்றவாளிகள் கிடையாது. நீங்கள் வாழத் தகுதியில்லாதவர்கள் கிடையாது. தைரியமாக சூழலை எதிர்கொள்ளுங்கள். அதைத்தாண்டி உலகம் இருக்கு… உறவுகள் இருக்கு… கொள்கை இருக்கு… தத்துவங்கள் இருக்கு… நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள். தைரியமாக அநீதியை எதிர்த்து நில்லுங்கள்.’’லஷ்மி சரவணக்குமார், எழுத்தாளர்‘‘பாலியல் குற்றங்களைப் புரிகிற ஆண்கள் தனியாக எங்கிருந்தோ வருகிறவர்கள் அல்ல, நம்வீட்டில் நம் தெருவில் நமக்குத் தெரிந்தவர்களில் இருந்துதான் உருவாகுகிறார்கள். தனக்கு உடமையில்லாத ஒரு பெண்ணின் உடல் மீது எல்லாவிதமான வன்முறைகளையும் செய்துவிட்டு அது குறித்து எந்தவிதமான குற்றவுணர்வுகளுமில்லாமல் அலையும் இவர்களோடு சேர்ந்த ஒவ்வொருவரையுமே நாம் சந்தேகிக்கத்தானே வேண்டும்.குடும்பம், பொதுவெளி என எல்லா இடங்களிலும் ஆண் ஆணாகவே மாறிப்போவதற்கான முதல் காரணம் அவன் குடும்பம். பெண்கள் குறித்து எந்தவித அடிப்படை புரிதல்களும் இல்லாமலே இங்கு பெரும்பாலான ஆண் குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். பெண்களை எப்படி எதிர்கொள்வது என்பதே அவர்களுக்கு சிக்கலாய் இருக்கிறது. அப்பாவுக்கு பணிந்து போகும் அம்மாவையும், அக்கா, தங்கைகளை பார்த்து வளரும் ஒருவன் அப்பாவைப் போலவே மாறுகிறான்.பெண்கள் ஆண்களின் விருப்பங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் என்கிற மனோபாவம் சிறு வயதிலேயே ஆழமாய் பதிகிறது. இது இந்தியச் சூழலில் வளர்கிற 90 சதவிகித ஆண்களுக்கு பொருந்தும். பெண்களை இழிவாக நடத்தக்கூடிய இவர்களால் எந்தக் குற்றங்களையும் எளிதாக செய்ய முடியும். ஒரு மனிதன் தான் எதிர்கொள்ளும் எந்தப் பெண்ணையும் நேசிக்காமல் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறான் என்றால் பெண்கள் குறித்து, வாழ்க்கை குறித்து அவனது புரிதல் தான் என்ன? நம் தேசத்தில் மட்டும்தான் மனிதர்கள் இத்தனை மனச்சிக்கல் கொண்டவர்களாய் இருக்கிறார்கள். சமூகத்தின் மிகச்சிறு அழகே குடும்பம் என்பதை எல்லாம் நாம் புரிந்துகொள்வதே இல்லை.’’டாக்டர் சுனில், மருத்துவ உளவியல் நிபுணர்‘‘அடிப்படையில் மனிதன் பிளசர் ஸீக்கர் இயல்பு கொண்டவன். தங்கள் புகைப்படத்தை பதிவேற்றி லைக், க்யூட் பெறுவதன் மூலமாக உறவைத் தேடுகிறான். இதனால் முகநூலில் முழுவதுமாய் தன்னை தொலைக்கிறான். சிக்கல் இங்கே துவங்குகிறது. 56 கோடி மக்களிடம் ஆண்ட்ராய்ட் கைபேசி இருப்பதாக ஒரு தகவல் உள்ளது. கிராமம், நகரம் என இதில் பிரிவினை இல்லை. கைபேசி இன்று எல்லாத் தரப்பினரின் தேவையை பூர்த்தி செய்யும் ஒன்றாக மாறி நிற்கிறது. தனி மனிதனுக்கு பொழுதை கழிக்க, செய்தியை பகிர்ந்துகொள்ள, நட்பைத்தேட, பாலுணர்வு தொடர்பான விசயங்களையும் பூர்த்தி செய்ய, உண்ண, உடுத்த என அத்தனை தேவைகளும் கையடக்க அலைபேசிக்குள் பூர்த்தியாகின்றன.இன்றைய குழந்தைகள் கேட்ஜெட் உலகில் புலமை வாய்ந்தவர்கள். நம்மிடம் ஒரு இ-மெயில் ஐ.டி. இருந்தால் இன்றைய இளைஞர்களிடம் குறைந்தது நான்கு இ-மெயில் ஐ.டி. இருக்கிறது. அதில் ஒன்றை தவறான செயல்களை செய்வதற்காகவே வைத்திருக்கிறார்கள். கையடக்க கைபேசிக்குள் தங்களைத் தொலைக்கும் இவர்களுக்கு பள்ளிகள் இதைப் பற்றி சொல்லித் தருகிறதா? பெற்றோர்கள் இவர்களை கண்காணிக்கிறார்களா? எந்த அளவிற்கு பெற்றோர் டெக்னாலஜி அறிவோடு இருக்கிறார்கள் எனப் பல விசயங்கள் இதில் உள்ளது. மனிதன் எத்தனை கடினமான நெருக்கடியினை சந்தித்தாலும் தொடர்ந்து வாழும் திறன் கொண்டவன்.எனவே பொள்ளாச்சி பாலியல் பிரச்சனையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ யார் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களாலும் கட்டாயம் வெளிவர முடியும். காலம்தான் இதற்கு மருந்து. காலம் கடந்தும் சிலருக்கு அதன் வடு ஆறவில்லை என்றால் அதற்கு மனநலம் சார்ந்த சிகிச்சைகள் கட்டாயம் உண்டு. இந்தப் பிரச்சனையால் பாதிப்படைந்தவர்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ, தூக்கமின்மை, பயம், கனவுத் தொல்லை, பதட்டம் போன்றவை இருந்தால் கண்டிப்பாக மனநல மருத்துவர்கள் அல்லது மனநல ஆலோசகரை அணுகுவதே நல்லது.’’டாக்டர் ஜெயசுதா, மனநல ஆலோசகர்‘‘டெக்னாலஜி மூலமாக வெளியில் வராத எத்தனையோ குற்றங்கள் நாட்டில் இருக்கு. பாலியல் பிரச்சனை என்பதால் இந்த செய்தி பரபரப்பாகியுள்ளது. டெக்னாலஜியின் தாக்கம் மனிதத்தை நிறையவே சாகடித்துக் கொண்டிருக்கிறது. பொள்ளாச்சி சம்பவம் டெக்னாலஜிக்கல் வளர்ச்சியுடைய தாக்கத்தின் விளைவு. சின்னக் குழந்தைகள் தொந்தரவு கொடுத்தால்கூட மொபைலைக் கையில் கொடுக்கிறோம். முன்பு பெற்றோர்கள் குழந்தைகளை திருமணம், இறப்பு, குடும்ப நிகழ்ச்சிகள், திருவிழா என அழைத்துச் செல்வார்கள். இதனால் சுற்றி இருப்பவர்களையும், உறவுகளையும் அனுபவப்பூர்வமாக உணர முடிந்தது.இந்த 2000 கிட்ஸ் எனப்படும் மில்லினியர்ஸ் குழந்தைகள் உறவுகளையும், நண்பர்களையும் புரிந்துகொள்ள முடியாமல் நிஜ வாழ்க்கையை கோட்டைவிடுகிறார்கள்.பெரியவர்களைப் பார்த்தால் முன்பு வணக்கம் வைப்போம். வாங்க உட்காருங்க எனத் தண்ணீர் எடுத்துக் கொடுப்போம். உறவுகள், நண்பர்கள் என்று நெருங்கிப் பழகினோம். இப்போது குழந்தைகள் வீட்டிற்கு வருபவர்களின் முகத்தைக் கூட பார்க்காமல் மொபைலில் விளையாடிக்கொண்டே இருக்கிறார்கள். பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லித் தருவதை மாணவர்கள் கவனிப்பதில்லை. கூகுளில் பார்த்துக்கொள்கிறேன், யூ டியூப்பில் கற்றுக்கொள்கிறேன் என வகுப்புக்களை நிராகரிக்கிறார்கள்.ஆசிரியருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற நிலையை உணராமலே இந்தத் தலைமுறை செயல்படுகிறது. மொபைல் ஆப்களில் நிறைய விளையாட்டு டிசைன் பண்ணப்பட்டு இருப்பதே இளைஞர்களை அடிமையாக்கத்தான். டெக்னாலஜிக்குள் மனித மூளையை பூட்டி வைக்கும் முயற்சியே இது. மொபைல் ஆப் கேம்களில் நேரத்தை விரயமாக்கி, அடுத்து.. அடுத்து.. என பயணிக்கும்போது சில சமூகவிரோத செயல் அது தொடர்பான லிங்க், கும்பல் என தங்களைத் தொலைக்கிறார்கள். இதில் அழிவும் இருக்கு. ஆக்கமும் இருக்கு.திறமையாக பயன்படுத்தத் தெரியவேண்டும். பாதிப்பின் வடிவம் வேறாக இருக்கலாம். பாதிப்பை செய்யும் டெக்னாலஜி ஒன்றுதான். இது ஆண், பெண், குழந்தைகள் என ஒவ்வொருவரையும் வெவ்வேறு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும். தனி மனிதனின் பழகும் திறன், உறவுகள், சமூக வாழ்க்கை, அவனது பிரச்சனைகளை சமாளிக்கும் திறன், சண்டை சச்சரவுகளை எதிர்கொள்கிற திறன், படைப்பாற்றல் என வாழ்வியலை மேம்படுத்தத் தேவையான திறன்கள் வளராததன் விளைவுகள்தான் குற்றச் செயல். உண்மையான உலகில் பயணிக்கும்போது திறனை வளர்க்க முடியாமல் இன்றைய தலைமுறை தடுமாறுகிறது.விளைவு, குற்றவாளிகளோடும், தவறானவர்களோடும் பழகும்போது சரி எது, தப்பு எது, தனக்கு எது தேவை என்பதெல்லாம் தெரியாமலே சிக்கிக்கொள்கிறார்கள். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் மனநலம் சார்ந்த விசயங்களுக்காக இன்றைய மாணவர்களுக்கு பாடத்திட்டத்தோடு ஒரு வகுப்பு வேண்டும். டெக்னாலஜி உலகில் இருந்து நம்மை நாம் எப்படி தற்காப்பது? நமது மனநலத்தையும், சிந்தனையையும் பாதிக்காத அளவு எப்படி அதை தள்ளி வைப்பது என பள்ளியில் இருந்தே சொல்லிக் கொடுக்கத் தொடங்க வேண்டும்.’’– மகேஸ்வரி நாகராஜன் …
ஏறி மிதித்து எழுந்து வா…பெண்ணே..!
previous post