கடலூர்: மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் கடலூரில் ஏரி மீன்களின் விற்பனை நடைபெற்றது. தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளது. இந்த தடைகாலம் வரும் 15ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தடை காலத்தில் நாட்டு படகுகள் மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். இதனால் மீன்களின் வரத்து மிகவும் குறைவாக காணப்படும். மேலும் மீன்களின் விலையும் சற்று உயர்ந்து காணப்படும்.
இந்நிலையில் கடலூரில் தற்போது ஏரி மீன்களின் விற்பனை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கடலூர் அரசு தொழில் பயிற்சி நிலையம் அருகே உள்ள இடத்தில் ஏரிகளில் இருந்து பிடித்து வந்த மீன்களை வியாபாரிகள் விற்பனை செய்தனர். இதில் வவ்வால் மீன் ஒரு கிலோ 220 ரூபாய்க்கும், கெண்டை மீன் 200 ரூபாய்க்கும், ஜிலேபி மீன் ஒரு கிலோ 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.