தேன்கனிக்கோட்டை, செப்.5: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேஷ் மற்றும் நிர்வாகிகள், கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தளி ஒன்றியம் சாரண்டப்பள்ளி ஊராட்சி அரப்பள்ளி, பாசிப்பள்ளி, ஒக்கன்தொட்டி உள்ளிட்ட ஊர்களின் மையப்பகுதியாக திகழும் வெங்கடகிரி ஏரியில், 8 ஏக்கர் நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்துள்ளார். அதேபோல், சாரண்டப்பள்ளி ஊராட்சியில், 10 ஏக்கர் அரசு புரம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது.
ஏரி ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. ஏரியில் தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்றி, நீர்வழிபாதையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். தளி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஏரி ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, நீர்வழிப்பாதைகளை தூர்வார வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.