திருவண்ணாமலை, ஜூன் 16: திருவண்ணாமலையில் ஏரியில் மூழ்கி 3 வயது பெண் குழந்தை பலியானது. திருவண்ணாமலை எடுத்து துர்க்கை நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி(24). ஸ்வீட் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவரது மனைவி சங்கீதா(23). இவர்களது குழந்தைகள் தியா(3), மகிழினி(1).
இந்நிலையில், நேற்று சங்கீதா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, குழந்தை தியா அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியுடன் தனது வீட்டுக்கு பின்புறமுள்ள ஏரி அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென நீரில் மூழ்கி தியா தத்தளித்தார். அதை பார்த்து ஓடிவந்த மற்றொரு சிறுமி, குழந்தையின் தாயிடம் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து, ஓடி வந்த சங்கீதா, நீரில் மூழ்கிய குழந்தையை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
ஆனால், அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே குழந்தை தியா இறந்துவிட்டதை உறுதி செய்தனர். இதுகுறித்து, குழந்தையின் தந்தை முனுசாமி அளித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மூழ்கி குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.