தாம்பரம்: தாம்பரம் அருகே ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானான். தாம்பரம் அடுத்த பெருங்களத்துார், புத்தர் நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் – நாகலட்சுமி தம்பதியினர். இவர்களது மகன் ஹரிஹரன்(14). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று ஹரிஹரன் அவரது நண்பர்கள் 4 பேருடன் முடிச்சூர், லிங்கம் நகர் பகுதியில் உள்ள முடிச்சூர் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது நீச்சல் தெரியாத ஹரிஹரன் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி மாயமானார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து நண்பர்கள் அலறிக் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் பீர்க்கன்காரணை காவல் நிலைய போலீசார் மற்றும் தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஏரியில் மூழ்கிய ஹரிஹரனை சடலமாக மீட்டனர். அதனைத்தொடர்ந்து, போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.