தர்மபுரி, ஜூன் 3: தர்மபுரி சோகத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாட்டுக்காரனூர், ஏ.ரெட்டிஅள்ளி உள்ளிட்ட 4 கிராமங்களை சேர்ந்த மக்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சோகத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மாட்டுகாரனூர், ஏ.ரெட்டிஅள்ளி உள்ளிட்ட 4 கிராமங்களின் வழியாக ராமக்காள் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு வரும் நீர்வழிப்பாதை பகுதியில் வீட்டு மனைகளாக விற்பனை செய்ய முயற்சி செய்து வருகின்றனர். அதற்காக மண் கொட்டி ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். தட்டிக்கேட்டால் மிரட்டுகின்றனர். போலீசார் மூலம் பொதுமக்கள் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. இந்த நீர் வழிப்பாதை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்து வீட்டுமனை செய்ய ஏற்பாடு செய்யும் இடம் ஆனது.
தர்மபுரி- மொரப்பூர் ரயில்வே சாலை அமைக்க, ஏற்கனவே அரசு அளவீடு செய்து தற்போது வரை அப்பணிகள் நடந்து வருகிறது. அதற்கு முன்பாக இந்த இடங்களை வீட்டு மனைகளாக விற்பனை செய்ய அப்ரூவல் பெறுவதற்காக முயற்சி நடந்து வருகிறது. இதனால் நீர் வழி கால்வாய்கள் அப்பகுதிகள் அடைக்கப்படுவதால், சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு ஏரி கால்வாய்களிலிருந்து செல்லும் தண்ணீர் செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கும் அபாயம் உள்ளது. எனவே, அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரித்து பின்னர் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.