திருவண்ணாமலை, ஜூன் 4: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருவரங்கம் அடுத்த ஜம்படை கிராமத்தைச் சேர்ந்தவர் சடையன் மகன் திருமலை (55). மேஸ்திரி. இவர், சென்னைக்கு மேஸ்திரி வேலைக்காக செல்வதாக குடும்பத்தினரிடன் தெரிவித்து விட்டு நேற்று முன்தினம் அதிகாலை வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார். ஆனால், சென்னை சென்று சேர்ந்து விட்டதாக தகவல் தெரிவிக்கவில்லை. அதனால், சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால், அவரது செல்போன் செயலிழந்து இருந்தது.
எனவே, பல்வேறு இடங்களில் அவரை தேடினர். இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த நந்திவாடி கிராமத்தில் உள்ள ஏரிக்கரை பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் திருமலை சடலமாக இருப்பது நேற்று காலை தெரிய வந்தது. இது குறித்து கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில், திருவண்ணாமலை தாலுகா போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதுகுறித்த தகவல் அறிந்ததும், சம்பவ இடத்துக்கு வந்த அவரது மகன் அருண் பாண்டியன், தனது தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். தனது தந்தை எதற்காக இந்த பகுதிக்கு வந்தார் என குழப்பம் அடைந்த அவர், தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.