ஏரல், ஜூன் 28: ஏரல் – மங்கலக்குறிச்சி மெயின் ரோட்டில் வேப்பமரக்கிளை ஒடிந்து விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஜேசிபி மூலம் மரக்கிளையை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். ஏரலில் இருந்து மங்கலக்குறிச்சி செல்லும் மெயின் ரோட்டில் வடிகால் மடை அருகே நேற்று காலை 7 மணியளவில் சாலையோரத்தில் இருந்த வேப்ப மரக்கிளை ஒடிந்து ரோட்டில் விழுந்தது.
இதனால் இவ்வழியாக செல்லும் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. ஏரலில் இருந்து மங்கலக்குறிச்சி வழியாக நெல்லைக்கு செல்லும் பஸ்கள் ஏரலில் இருந்து குரங்கணி, ஸ்ரீவைகுண்டம் வழியாகவும், ஏரலில் இருந்து மங்கலக்குறிச்சி, பெருங்குளம் வழியாக சாயர்புரம், தூத்துக்குடிக்கு சென்ற பஸ்கள் ஏரலில் இருந்து சிறுத்தொண்டநல்லூர், சாயர்புரம் வழியாகவும் மாற்றிவிடப்பட்டன.
தகவலறிந்த நெடுஞ்சாலை துறை ஆய்வாளர் ஜெயசோபியா அறிவுறுத்தலின்படி சாலைப் பணியாளர்கள் முருகன், சுந்தர்சிங் மற்றும் திருப்பதி வெங்கடாசலம் ஆகியோர் ஜேசிபி மூலம் சாலையில் விழுந்து கிடந்த மரக்கிளையை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இதையடுத்து காலை 8.15 மணியளவில் ஏரலில் இருந்து மங்கலக்குறிச்சி வழியாக மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.