Saturday, June 22, 2024
Home » ஏன் குற்றங்கள் குறைவதில்லை!

ஏன் குற்றங்கள் குறைவதில்லை!

by kannappan

நன்றி குங்குமம் தோழி  நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாகப் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. ஏன் இப்படி? தண்டனைகள் அதிகமானால் குறைந்து விடுமா? காவல்துறையின் பங்கு என்னவாக இருக்கிறது? என்னதான் தீர்வு?… என்ற கேள்விகளுக்கான பதிலை தேடுகையில், “யார் நமக்குப் பாதுகாவலராக இருக்கிறார்களோ அவர்களுக்கே பிரச்சினையாக இருக்கிறது” என்கிறார், குற்றவியல் மற்றும் காவல்துறையின் நிர்வாக உதவி பேராசிரியராக பணிபுரியும் Dr.மைக்கேல் எல்.வலன். இவர் இங்குப் பெண் காவலர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் அடுக்குகிறார்.சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக 1973 ஆம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில், சப் இன்ஸ்பெக்டர் (SI) உட்பட நான்கு பெண் காவலர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வராக மு.கருணாநிதி (1971-1976) இருந்த போது தமிழ்நாட்டில் 1973 ஆம் ஆண்டு ஒரு பெண் உதவி ஆய்வாளர், ஒரு தலைமைக்காவலர், இருபது பெண் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். ஜெயலலிதா (1991-1996) முதல்வராக இருந்த போது பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழ் நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. பின்னர் 2003-2006 காலகட்டங்களில் பெண்கள் மட்டுமே உள்ள சிறப்புப் பெண்கள் ஆயுதப்படை தொடங்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு முதல் (SI) சப் இன்ஸ்பெக்டர் தேர்வில் பெண்களும் இடம் பெற்றனர்.காவல் துறையில், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 33% பெண்கள் எல்லா மாநிலங்களிலும் கிடையாது. தமிழகம் ஓரளவு அதை நெருங்கியுள்ளது. இந்தியாவிலேயே தமிழகக் காவல்துறையில் தான் அதிக பெண் காவலர்கள் பணிபுரிகிறார்கள். 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த விவியன் என்ற பேராசிரியை இந்தியாவில் உள்ள பெண் காவலர்கள் பற்றிய ஓர் ஆய்வினை மேற்கொண்டார்.  இதில் 75% மேலானோர் மன உளைச்சலில் இருப்பதாகக் கூறுகிறார். அதிலும் லோயர் லெவலில் இருப்பவர்கள்தான் பெரும்பான்மையானவர்கள். (SIக்கு மேல் உள்ளவர்கள் ஹையர் லெவல், அதன் கீழ் உள்ளவர்கள் லோயர் லெவல்) அதில் 99% லோயர் ரேங்கில் வருகின்றனர். மீதமுள்ள 1% ஹையர் ரேங்க். கிட்டத்தட்ட உயர் அதிகாரிகளாக 5,000 பேர்தான் உள்ளனர். இந்த 1% ஆட்கள் தான் 99% பேரைக் கையில் வைத்துள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரைக் கடந்த ஆறு மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் விஷ்ணு பிரியா மட்டும் சீனியர் ஆபீசர். பெண் காவலர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று வேலை பளு. முக்கிய ஆட்கள் வரும் போது சாலையோர பந்தபோஸ்களில் ஈடுபடுவார்கள். அங்கு அவர்களுக்கு பாத்ரூம் வசதி  இருக்காது. சிலர் மாதவிடாய் காலங்களில் இன்னும் சிரமத்தை அனுபவிக்கிறார்கள். அந்த நேரங்களில் விடுப்பும் கிடையாது. இன்று சிட்டியில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தி இருக்கிறார்கள். இண்டலிஜண்ட்ஸ் வச்சிருக்காங்க. இப்படி இருந்தும் எதற்கு ரோட்ல நிக்க விடுறாங்க. CM-வராங்கன்னா, உங்க இண்டலிஜண்ட்ஸ் ஸ்ட்ராங்கா இருக்கும் போது எதற்கு பந்தபோஸ். இங்கு ஹூமன் ரிசோர்சை, காவல்துறையில் சரியாக பயன்படுத்துவது கிடையாது.தமிழகத்தை பொறுத்தவரை 7.2 கோடி மக்களுக்கு சுமார் 1,20,000 காவலர்கள் உள்ளனர். விகிதாச்சார அடிப்படையில் 700 பேருக்கு ஒரு காவலர். ஒரு விஐபி-க்கு குறைந்தது மூன்று காவலர்கள் உள்ளனர். அரசியல் மீட்டிங் என்றால் 5000 முதல் 10000 போலீஸார் குவிக்கப்படுகிறார்கள். மக்களுக்கான பாதுகாப்பு எங்கு இருக்கிறது. சக பெண் காவலர்கள் புகார் அளிக்கத் தனியா செல் கிடையாது. 1995 ஆம் ஆண்டு முதல், அசோசியேஷன் வேண்டுமென்று ேபாராடுறாங்க. இன்று வரை அரசு தர மறுக்கிறது.  இது குறித்து ஓய்வு பெற்ற காவல் உயர் அதிகாரியிடம் பேசும் போது, “சங்கம் அமைத்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு இருக்காது கரப்சன் ஆகிவிடும்” என்றார். ஆனால் IPS ஆபீசர்களுக்கு மட்டும் சங்கம் இருக்கிறதே என்ற கேள்விக்கு பதிலில்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் யூனியனே இருக்கிறது. அங்கு இவ்வளவு பிரச்சினைகள் இல்லை. உன் வேலையை நீ பார், என் வேலையை நான் பார்க்கிறேன். குறையிருந்தால் சொல் என்று வேலை செய்து வருகிறார்கள். பெண் காவலர்களை பணிக்கு எடுத்த சமயத்தில் அவர்களுக்கான பணி நேரம் 7am-7pm ஆக இருந்தது. 1995 ஆம் ஆண்டு அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆரம்பிக்கப்பட்ட பின் ஆணுக்கு நிகராக கான்ஸ்டபில், ஆம் ரிசர்வ்டு (பட்டாலியன்), ஸ்டேஷன் டியூட்டி என கொடுக்கப்பட்டது. தமிழக காவல் துறையினரைப் பொறுத்த வரை 8 மணி நேரம் வேலை என்பது கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. ஒவ்வொருவரும் 12 முதல் 16 மணி வரை வேலை பார்க்கிறார்கள். ஒரு சிலர் 24 மணி நேரம் கூட பார்க்கிறார்கள். ஆனால் பக்கத்து மாநிலமான கேரளாவில் 8 மணி நேர வேலையும், வார விடுமுறை ஒரு நாளும் வழங்கப்படுகிறது.குழந்தைப் பேறு காலங்களில் 180 நாட்கள் விடுமுறை கொடுக்கிறார்கள். லோயர் லெவலில் இருக்கும் காவலர்கள் மருத்துவ விடுமுறை தவிர வேறு லீவ் எடுக்க வாய்ப்பில்லை. மத்திய அரசு பணியில் இருக்கும் பெண்களுக்கு 180 நாட்கள் தவிர 730 நாட்கள் குழந்தை பராமரிப்புக்காக விடுமுறை வழங்கப்படுகிறது. இதற்கு உயர் அதிகாரிகள் உதவ வேண்டும். ஆனால், அவர்கள் சொல்லும் ஒரே வார்த்தை ஆட்கள் குறைவு.  இதே போல் சம்பளம் மற்றும் நன்மை. எம்.டி.சி பஸ் டிரைவர் 8 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்த்தால் மேலதிக ஊதியம் ரூ.800 வழங்கப்படுகிறது. போலீஸுக்கு ரூ.400. அதுவும் கொடுக்கிறார்களா என்பது சந்தேகம். அடுத்த முக்கியமான பிரச்சினை குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவதில்லை. கணவரும் காவலராக இருந்தால் ரொம்பவே கஷ்டம். குழந்தைகளுக்கு நல்லது கெட்டது சொல்லிக் கொடுக்க, நல்ல ஒரு சாப்பாடு செய்து கொடுக்க… என அவர்களது சின்னச் சின்ன சந்தோஷங்களையும் இழக்கிறார்கள்.என்னுடைய மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பொதுபோக்குவரத்து என்ற தலைப்பில், பேருந்தில் வேலைக்காகவும், கல்விக்காகவும் பயணிக்கும் 500 பெண்களிடம் ஓர் ஆய்வு மேற்கொண்டார்கள். கிட்டத்தட்ட 65% பெண்கள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். பீக் ஹவர்களில், எந்த ரூட்டில் இது ேபான்ற துன்புறுத்தல் அதிகமாக உள்ளதோ அதில்  ஒரு காவலரை பணியமர்த்தலாம். யூனிஃபார்ம் கண்டால் பயப்படுவார்கள். இதனால் 60-70% குறையும். பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் பாதுகாப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. சமீபத்தில் பொள்ளாச்சி விவகாரத்தில் அந்த பெண்ணின் தகவல்களை வெளியிட்டிருப்பது இதற்குச் சான்று.வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் சீண்டல்கள் இருந்தால் அதை கண்காணிக்க Internal Complaints Committee (ICC), உள்ளது. தமிழக காவல் துறையில் இது பேப்பரில்தான் இருக்கிறதே ஒழியே ஆன் ரெக்கார்ட்டில் கிடையாது. இங்குப் பெண் காவலர்கள் மக்களிடமும், உடன் பணிபுரிபவர்களிடம் பிரச்சினையை சந்திக்கிறார்கள். மேல் அதிகாரி வந்தால் பேசவேண்டும். தவறினால் டியூட்டி மாற்றப்படும். கணவன்-மனைவி, காவலர்கள் என்றால் ஒரே ஊரில் அல்லது, பக்கத்து ஸ்டேஷனில் டியூட்டி போட வேண்டும். மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இது இருக்கிறது. அப்படியொரு வாய்ப்பு இல்லாததினால் தகாத உறவு ஏற்படும் சூழலை உருவாக்கிக் கொடுக்கிறோம். இந்த பிரச்சினை எல்லா துறைகளிலும் இருக்கிறது. சமீபத்தில் எவ்வளவு போலீஸ் ஆடியோ லீக் ஆனது. குடும்பத்திற்காக மட்டுமே அதனை சகித்துக்கொள்கிறார்கள். இதற்கான நடவடிக்கை என்பது அரிது. குற்றங்களை தண்டிக்கத்தான் போலீஸ். இங்கேயே ஓட்டை என்றால்.இவர்களின் வேலை முழுக்க முழுக்க பந்தோபஸ்து, ரோந்தாகத்தான் இருக்கிறது. தற்போது கால் சென்டர்ஸ், ஹெல்ப் லைனில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். இது ஒரு நல்ல விஷயம். பெண் ஒருவர் புகார் கொடுக்க வரும் போது, நேரடியாகப் பெண் காவலர்கள்தான் ஹேண்டில் செய்கிறார்கள். இருந்தாலும் எத்தனைப் பெண்கள் புகார் அளிக்க வருகிறார்கள். பொள்ளாச்சி பிரச்னையில் 250 பெண்களில் ஒரு பெண் தான் புகார் அளித்திருக்கிறார்.என்னதான் பெண் விடுதலையை பேசினாலும், பாலின உணர்தல் கிடைக்காத வரை ஒன்றும் செய்ய முடியாது. அவ்வாறு நிகழ்ந்தால், 33% இட ஒதுக்கீடு நாளை 50% உயரும். இது காவல் துறைக்கும் பொருந்தும். Opinion of Police ஆய்வில் 42% தான் சரியாக வேலை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. காவலர்கள், படித்தவன் பணம் படைத்தவனை ஒரு மாதிரியும், படிக்காதவனை வேறு மாதிரியும் பார்க்கிறார்கள்.  இதற்கிடையில் மேல் அதிகாரிகளின் அழுத்தம். இந்த அழுத்தத்திலிருந்து வெளியேற யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு மன உளைச்சல் இல்லாமல் தங்களின் பணியை செய்ய முழு ஒத்துழைப்பு கிடைத்தால்தான் அவர்களால் வேலையை முழு ஈடுபாட்டோடு செய்ய முடியும். இதனால் குற்றங்கள் கணிசமாக குறையும். உயர் அதிகாரிகளும், கீழ் உள்ளவர்களை சரிசமமாக நடத்தி அவர்களின் தேவை என்ன என்பதைப் புரிந்து கொள்ளாத வரைக்கும் காவலர்களுக்கு ஒரு விடிவு காலமே கிடையாது. இதில் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. தமிழக அளவில் கான்ஸ்டபில், SI, DSP எனவும், இந்திய அளவில் IPS  என தேர்வு இருக்கிறது. 22 வயதில் IPS தேர்ச்சி பெற்று ASP – யாக நியமிக்கப்படுபவருக்கு லோக்கல் ஸ்டேஷனிலிருக்கும் ஹெட் கான்ஸ்டபிலுக்கு தெரிந்திருக்கும் தகவல் கூட தெரிய வாய்ப்பில்லை. மக்களின் உண்மையான நிலவரம் தெரியாமல் உயரதிகாரிகள் கட்டளை இடுபவர்களாக மட்டுமே இருக்கிறார்கள். கான்ஸ்டபில் பதவியில் இருக்கும் பெண்களுக்கு குறிப்பாக குற்றவாளிகளையும், பாதிக்கப்பட்டவர்களையும் எப்படி ஹேண்டில் செய்ய வேண்டும் என்று சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். இங்கு கொடுக்கப்படும் பயிற்சியானது ஒட்டுமொத்தமாக இருக்கிறது. அதில் எந்த பயனுமில்லை. ஒரு புகார் வருகிறது என்றால், அதன் வீரியம் பொறுத்து DGP-வரைக்கும் போகிறது. இதில் அரசியல் ஆட்கள் யாராவது சம்பந்தப்பட்டிருந்தால், அவராலும் ஏதும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார். இங்கு இப்படித்தான் பல பிரச்சினைகள் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலை சமூக வலைத்தளங்களால் மாறி வருகிறது. ஒரு செய்தி தீயாய் மக்களிடம் பரவுகிறது. இதனால் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது’’ என்றார் Dr.மைக்கேல் எல்.வலன்.தொகுப்பு அன்னம் அரசு

You may also like

Leave a Comment

16 − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi