புதுச்சேரி, நவ. 22: ஏனாமில் அரசு அதிகாரியின் வீட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி மாநிலம், ஏனாம் பிராந்தியம், காமராஜ் நகரைச் சேர்ந்தவர் மாதா ராமராஜூ (73). ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ராமராஜூ தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு, திருப்பதி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தனது மகனின் வீட்டுக்கு சென்று விட்டார். 40 நாட்களுக்கு மேலாக அங்கு தங்கியிருந்த தம்பதி, நேற்று முன்தினம் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். பின்னர் ராமராஜூ வீட்டுச் சாவியை போட்டு மெயின் கதவை திறந்தபோது அது உட்புறமாக பூட்டப்பட்டிருக்கவே சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டின் பின்பக்கம் சென்றபோது கதவு திறந்த கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உள்ளே சென்றபோது பீரோ அறையில் துணிமணிகள் சிதறிக் கிடந்தன. அதிலிருந்த மொத்தம் 12 பவுன் தங்க நகைகள் (செயின், வளையல், நெக்லஸ், கம்மல், மோதிரம்) மற்றும் இரண்டரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் உள்பட மொத்தம் ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. வீட்டில் வெகுநாட்களாக ஆளில்லாததை யாரோ மர்ம ஆசாமி நோட்டமிட்டு பின்பக்க கதவை உடைத்து துணிகர கொள்ளையில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. ஏனாம் போலீசார் சம்பவம் நடந்த வீட்டினை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.