வேலூர், ஜூன் 17: பாலாற்றில் பல தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. ஏதோ பேச வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார் என வேலூரில் முதற்கட்டமாக 18 வழித்தடங்களில் மினி பஸ் இயக்கத்தை தொடங்கி வைத்து அமைச்சர் துரைமுருகன் கூறினார். தமிழ்நாட்டில் பஸ் வசதி இல்லாத குக்கிராமங்களுக்கும் பஸ் வசதி ஏற்படுத்தித்தரும் வகையில், ‘புதிய மினி பஸ்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தஞ்சையில் தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்டத்தில் 50 வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. முதற்கட்டமாக 18 வழித்தடங்களில் பஸ்கள் இயக்க தொடக்க விழா வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். எம்பி கதிர்ஆனந்த், எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், அமுலு, மேயர் சுஜாதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாபு, துணைமேயர் சுனில்குமார், ஒன்றிய குழுத்தலைவர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரராஜன் வரவேற்றார்.
இதில், அமைச்சர் துரைமுருகன் மினி பஸ்கள் இயக்கத்திற்கான ஆணை வழங்கி பேசினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘எனது உடல்நலம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம். எல்லா காலத்திலும் சில துஷ்டர்கள் இருக்கிறார்கள். அக்கால ராவணன் துவங்கி இன்று வரையில் துஷ்டர்கள் இருக்க தான் செய்கிறார்கள். எந்த நாடாக இருந்தாலும் வளர்ந்த சமுதாயத்தில் குற்றங்கள் நிகழும். ஆனால் குற்றங்களை கண்டுபிடித்து தடுத்தால்தான் அது நல்ல அரசு. அதனைத்தான் தமிழக அரசு செய்து வருகிறது’ என்றார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் அணைகள் ஒன்றுமே கட்டவில்லை, துப்பாக்கி கலாசாரம் இருக்கிறது என கூறி உள்ளதாக நிருபர்கள் கேட்டதற்கு, ‘எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றும் தெரியாது. பாலாற்றில் கூட பல தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் பல அணைகள் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் பாதிக்கப்படாத வகையில் மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் லட்சக்கணக்கானோர் மத்தியில் துப்பாக்கி சூடு நடந்தது அதிமுக ஆட்சியில்தான். அப்போதுதான் துப்பாக்கி சூடு கலாசாரம் இருந்தது. ஏதோ பேச வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்’ என பதிலளித்தார். மேலும் திமுகவுடன் பாமக கூட்டணிக்கு வந்தால் சேர்த்து கொள்வீர்களா என நிருபர்கள் கேட்டதற்கு, ‘இன்னும் கால அவகாசம் உள்ளது’ என்றார்.