வந்தவாசி, ஆக.6: வந்தவாசி அருகே ஏடிஎம்மில் பேட்டரி திருடிய சென்னையை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். வந்தவாசி அடுத்த வெண்குன்றம் சையத் மிர்ஷா உசேனி நகர் பகுதியை சேர்ந்தவர் சபீர்(23). இவர் தனியார் ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வேலை செய்கிறார். கடந்த மாதம் 24ம்தேதி மேல்மா கூட்ரோடு சாலையில் உள்ள ஏடிஎம்மில் பணம் நிரப்ப சென்றபோது கேமரா இயக்குவதற்காக இருந்த 3 பேட்டரிகளை மர்மநபர்கள் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து சபீர் வந்தவாசி வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், எஸ்ஐ ராம்குமார் வழக்குப்பதிந்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தார். அதில், வாலிபர் ஒருவர் பேட்டரிகளை திருடியது தெரிந்தது. அந்த வாலிபர் வந்த பைக் நம்பரை வைத்து விசாரணை செய்ததில், சென்னை மந்தவெளி அண்ணாமலைபுரத்தை சேர்ந்த கோபி(32) என்பது தெரிந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வந்தவாசி- காஞ்சிபுரம் நெடுஞ்சாலை புலிவாய் கூட்ரோட்டில் வடக்கு போலீஸ் எஸ்ஐ ராம்குமார் தலைமையில் குற்றப்பிரிவு ஏட்டுக்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த வாலிபர் போலீசாரை கண்டதும் ஓட முயன்றார். சந்தேகமடைந்த போலீசார் அவரை துரத்தி சென்று பிடித்து விசாரணை நடத்தினர். இதில், ஏடிஎம்மில் பேட்டரிகளை திருடியதும், அதனை ஆக்கூரில் உள்ள ஆட்டோ பழுது பார்க்கும் நிலையத்தில் விற்றதும் தெரியவந்தது. பின்னர், போலீசார் 3 பேட்டரிகளையும் பறிமுதல் செய்து, கோபியை கைது செய்து நேற்று வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.