வேலூர், ஜூலை 22: கள்ளச்சாராயம் தேடுதல் வேட்டைக்கு பயன்படுத்தும் வகையில் வேலூரில் எஸ்பி அதிரடிப்படை போலீசாருக்கு ட்ரோன் பயிற்சி நேற்று நடந்தது. வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை அடியோடி ஒழிக்க எஸ்பி மணிவண்ணன் தலைமையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் ரெய்டு நடத்தி குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். மேலும் மலை மற்றும் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் கள்ளச்சாராய தொழிலில் ஈடுபடுவர்களை கண்டுபிடித்து கைது செய்வது போலீசாருக்கு கடும் சவால் தரும் பணியாக உள்ளது. இந்நிலையில் அடர்ந்து காடுப்பகுதிகளில் கள்ளச்சாராய கும்பலை பிடிக்க தற்போது போலீசார் ட்ரோன் கேமரா உத்தியை பயன்படுத்தி வருகிறனர். மலை மற்றும் காட்டுப்பகுதிகளில் சோதனைக்கு செல்லும் போலீசார் ட்ரோன் கேமராவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபடுபவர்களை கொத்தாக கைது செய்யும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையிதல் எஸ்பியின் அதிரடிப்படையில் உள்ள போலீசாருக்கும் ட்ரோன் கேமரா இயக்குவது குறித்து வேலூரில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. ட்ரோன் கேமராவை சிறப்பாக கையாளும் வல்லுனர்களை கொண்டு போலீசாருக்கு பயிற்சி அளித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கும்பலை பிடிக்க தற்போது ட்ரோன் கேமராவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் ரெய்டுக்கு செல்லும்போதும் டெக்னிக்கல் டீமை சேர்ந்தவர்களை ட்ரோன் கேமராவை பயன்படுத்த உடன் அழைத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்கும் வகையில் எஸ்பி அதிரடிப்படையைச் சேர்ந்த 10 பேருக்கு ட்ரோன் கேமராவை பயன்படுத்த பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக வேலூர் கோட்டை உள்பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது வெளிபகுதியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இப்பயிற்சி நிறைவு பெறும். அதன்பிறகு பயிற்சி பெற்ற போலீசாரே ட்ரோன் கேமராவை இயக்குவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.