ஓமலூர், மே 5: ஓமலூரில் உள்ள ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓமலூர் நகரின் மையத்தில் பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கி வளாகத்தில் 6 ஏடிஎம் மெஷின்கள் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு ஏடிஎம் மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மையத்தில் இருந்து கரும்புகை வெளியே வருவதை பார்த்த பாதுகாவலர்கள், உடனடியாக ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஏடிஎம் மையத்தில் மெஷின்கள், மின்சாதனங்கள் இருப்பதால், கெமிக்கல் பவுடரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து மின்சாரத்தை துண்டித்து சுவர்கள், மெஷின்கள் மீதும் பவுடரை அடித்து தீயை முழுமையாக அணைத்தனர்.
ஓமலூர் போலீசார் விசாரணையில், ஏடிஎம் மையத்தில் உள்ள ஏசி 24 மணி நேரமும் இயங்கி கொண்டே இருந்ததால், தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. அதேநேரம் ஏடிஎம் கொள்ளையர்கள், யாராவது பணத்தை கொள்ளையடிக்க முயன்று, முடியாததால் தீ வைத்து சென்றனரா என்ற கோணத்திலும் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். தீ விபத்து காரணமாக ஏடிஎம் மையம் பூட்டபட்டுள்ளதால், பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏடிஎம் மையத்தை விரைந்து சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.