பெரம்பலூர்,ஆக.26: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு செல்போன், கால்குலேட்டர்,புளூட்டூத் கொண்டுவர அனுமதி இல்லை. ஹால் டிக்கெட் இல்லாமல் தேர்வெழுத முடியாது என பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி அறிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் உதவி ஆய்வாளர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வை எழுதும் தேர்வர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வானது பெரம்பலூரில் துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வளாகத்தில் இன்று(26ம் தேதி) நடைபெறுகிறது.
இந்தத் தேர்விற்கு வரும் நபர்கள் கொண்டுவரக் கூடாதவைகள்: எழுத்துத் தேர்விற்கு வரும் நபர்கள் செல்போன்,கால்குலேட்டர்,புளூட்டூத் போன்ற எந்தவித எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் பணப்பை (பர்ஸ்), புத்தகங்கள் போன்ற எந்த வித உடைமைகளையும் கொண்டுவர அனுமதி இல்லை என்று மாவட்ட காவல்துறையின் சார்பாக தெரிவிக்கப்படுகிறது. தேர்விற்கு வரும் நபர்கள் கொண்டுவர வேண்டியவைகள்: தேர்விற்கு வரும் நபர்கள் கட்டாயம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை (Hall Ticket) கொண்டு வர வேண்டும். கொண்டு வராதவர்கள் தேர்விற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்விற்கு வரும் நபர்கள் அனைவரும் கட்டாயம் தங்களது புகைப்படத்துடன் கூடிய அரசால் வழங்கப்பட்ட ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அசலை கொண்டுவர வேண்டும். மேலும் முக்கியமாக தேர்வெழுத வருவோர் இன்று (26ம்தேதி) காலை 8.30 மணிக்குள் தேர்விற்கு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.