மதுரை, நவ.8: மதுரையில் நடந்த எஸ்ஐ பணிக்கான உடற்தகுதித் தேர்வில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 432 பேர் பங்கேற்றனர்.தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் காவல்துறையில் நேரடி எஸ்ஐ தேர்வுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆக.26ல் நடந்தது. இதில் தேர்வான மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உடற்தகுதித் தேர்வு நேற்று தொடங்கியது. 493 தேர்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
432 பேர் பங்கேற்றனர். 61 பேர் பல்வேறு காரணங்களால் பங்கேற்கவில்லை. தேர்வில் பங்கேற்றவர்களுக்கு கல்வித் தகுதிக்கான சான்றிதழ் சரிபார்த்தல், மார்பு அளவு மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்போட்டி நடந்தது. இத்தேர்வை மாநகர் போலீஸ் கமிஷனர் லோக நாதன் ஆய்வு செய்தார். மதுரை சரக டிஐஜி ரம்யா பாரதி, மாநகர தலைமையிடத்து துணை கமிஷனர் மங்களேசுவரன் இத்தேர்வுக்கான தலைவராக செயல்படுகின்றனர். முதல்கட்ட தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட உடற்தகுதித்தேர்வு இன்று நடக்கிறது.