பள்ளிகொண்டா, ஜூலை 13: வெட்டுவானம் எல்லையம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ₹9.7 லட்சம், 91 கிராம் தங்கம், 190 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் செலுத்தியுள்ளனர். பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் எல்லையம்மன் கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கோயிலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப பணம், நகைகள் ஆகியவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் எல்லையம்மன் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி உதவி ஆணையர் ஜீவானந்தம் முன்னிலையில் நடந்தது. இதில், பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ₹9 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கம், 91 கிராம் தங்கம், 190 கிராம் வெள்ளி ஆகியன கிடைத்தது. முன்னதாக, காணிக்கை எண்ணும் பணியில் வேலூர் சரக ஆய்வர் சுரேஷ்குமார், கோயில் செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பு பரந்தாமகண்ணன், கணக்காளர் சரவணபாபு மற்றும் கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.