கரூர்: கரூர் பசுபதீஸ்வரர் கோயில் முன்பு நடைபெற்ற எறிபத்த நாயனார் பட்டத்து யானையை துணித்த விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கரூரை தலைமையாக கொண்டு புகழ்ச்சோழர் ஆண்ட காலக்கட்டத்தில், இதே பகுதியில் வசித்து வந்த சிவகாமி ஆண்டார் என்ற சிவபக்தர் ஒருவர், தினமும் நந்தவன பகுதிக்கு சென்று சேகரித்த பூக்களை ஒரு கூடையில் கொண்டு வந்து, பசுபதீஸ்வரருக்கு தினமும் படைத்து சுவாமி தரிசனம் செய்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி நாளன்று, இதே போல், சிவகாமி ஆண்டார், பூக்களை பறித்துக் கொண்டு பசுபதீஸ்வரர் சுவாமிக்கு படைக்கும் நோக்கில் கோயில் அருகே நடந்து வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த புகழ்ச் சோழரின் பட்டத்து யானை, சிவகாமி ஆண்டார் கொண்டு வந்த பூக்குடலையை தட்டி விட்டு சென்றது. இதனால், பூக்கள் அனைத்தும் தரையில் விழுந்து சிதறியது. இதனைப் பார்த்த சிவகாமி ஆண்டார், செய்வதறியாது அழுது புலம்பினார்.