சிவகங்கை, ஆக. 26: சிவகங்கை, பழமலை நகரில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் காளி, மீனாட்சி, மதுரைவீரன், முத்துமாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விரதமிருந்தனர். கடந்த 22ம் தேதி பெருமாள்சாமி பூஜையுடன் திருவிழா தொடங்கியது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக எருமை மாடுகளை பலியிட்டு அதன் ரத்தத்தை குடிக்கும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை தொடங்கியது.
காளி தெய்வத்திற்கான பிரதான இடத்தில் இருக்கும் முதல் மாடு சம்மதம் தெரிவிக்கும் வரை (தலையை அசைப்பது) காத்திருந்து, அதை பலியிட்ட பின் அடுத்தடுத்த மாடுகள் வெட்டப்படுகின்றன. கழுத்தில் வெட்டி அதிலிருந்து பீய்ச்சியடிக்கும் ரத்தம் அப்படியே குடிக்கப்படுகிறது. காளிக்கு எருமையையும் பிற தெய்வங்களை வணங்குபவர்கள் ஆடுகளையும் பலியிடுகின்றனர். நேற்று 21 எருமைகள், 120 ஆடுகள் பலியிடப்பட்டன.
இவ்விழா சுமார் 25 தலைமுறைக்கும் மேலாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு தலைக்கட்டுக்கும் (ஒரே குடும்பத்திலிருந்து வரும் வழித்தோன்றல்) குடில் அமைத்து அதில் வழிபாடு செய்து ஒரு எருமை மாட்டை பலியிட்டனர். அந்த கறியை அந்த குடும்ப வாரிசுகள் எந்த ஊரில் உள்ளார்களோ அவர்களுக்கு கொடுத்து அனுப்புகின்றனர். காளி, அசுரனை (எருமை) வதம் செய்யும்போது தரையில் சிந்தும் ரத்தம் மீண்டும் அசுரனாக உயிர்தெழும் எனவும், அதனால் அதை சிந்த விடாமல் குடித்து விடுவதாக தெரிவிக்கின்றனர்.