பந்தலூர், ஜூலை 14: பந்தலூர் அருகே எருமாடு திருமங்களம் பகுதியில் பெட்டிக்கடை மீது மரம் விழுந்து காயம் அடைந்த வாலிபருக்கு வனத்துறை சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் எருமாடு பகுதியில் பெய்த கனமழைக்கு திருமங்களம் பகுதியில் வசித்து வரும் சந்திரன் என்பவரது பெட்டி கடை மீது கிராண்டீஸ் மரம் விழுந்து கடையில் இருந்த அவரது மகன் விக்னேஷ் (22) என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் அவர் வயநாடு பகுதியில் உள்ள சுல்தான் பத்தேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சேரம்பாடி வனத்துறை சார்பில் ரேஞ்சர் அய்யனார் மற்றும் வனத்துறையிர் மருத்துவ செலவிற்காக ரூ.10,000ற்கான காசோலையை விக்னேஷின் தந்தை சந்திரனிடம் நிவாரணமாக வழங்கினர். உடன் சேரங்கோடு ஊராட்சி மன்ற துணை தலைவர் சந்திரபோஸ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேலும் அப்பகுதியில் ஆபத்தான நிலையில் இருக்கும் மரங்களை வெட்டி அகற்ற வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.