தேவதானப்பட்டி, மே 29: தேவதானப்பட்டி முருகமலை பகுதியில் இருந்து தர்மலிங்கபுரம், கதிரப்பன்பட்டி, சில்வார்பட்டி வழியாக பெரியஓடை மூலம் ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய்க்கு தண்ணீர் செல்கிறது. மேலும் எருமலைநாயக்கன்பட்டியில் இருந்து மஞ்சளாறு அணை உபரி நீர் வாய்க்கால், மற்றும் காட்டாற்று ஓடை மூலம் வேட்டுவன்குளம் கண்மாய்க்கு தண்ணீர் செல்கிறது. எருமலைநாயக்கன்பட்டி பகுதியில் இந்த மூன்று ஓடைகளிலும் இரவு நேரங்களில் சிலர் டிராக்டர் மூலம் மணல் திருடுவதாக அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர்.
மணல் திருட்டால் அதனை சுற்றியுள்ள விவசாய கிணறுகளில் நீர்மட்டம் சரிந்து வருகிறது.இது குறித்து எருமலைநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி பெருமாள் கூறுகையில், ‘‘கண்மாயின் முகப்பு பகுதியில் பரவி கிடக்கும் மணலை, சிலர் இரவு நேரங்களில் திருடி சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். கண்மாயை ஒட்டியுள்ள வண்ணான்கரட்டில் கிராவல்மண் திருடப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. மணல் திருட்டை தடுக்க வருவாய்த்துறையினர், போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.