திருச்சி, செப்.5: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சிறுகமணி, வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கான பல்வேறு பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள், இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பவர்கள், இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்பவர்கள் மற்றும் சந்தைப்படுத்துபவர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்கும் பொருட்டு திருச்சி கே.வி.கே இயற்கை விவசாய நண்பர்கள் குழு அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு தேவையான பயிற்சிகள், வழிகாட்டுதல்கள், சந்தைப்படுத்துதல், இயற்கை வேளாண்மை சார்ந்த தகவல்கள் மற்றும் தொழில்நுட்பங்களை எளிதில் பகிர்ந்து கொள்ள முடியும்.
இதுதொடர்பான தகவல்களை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜா பாபு வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆர்வமுள்ள இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள், இயற்கை இடுபொருட்கள் தயாரிப்போர், இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வோர், சந்தைப்படுத்துவோர் தங்கள் பெயர், முகவரி மற்றும் முழு விபரத்துடன் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 0431-2962854, 9171717832, 6381186765 என்ற எண்ணை அலுவலக நேரத்தில் (காலை 9 முதல் மாலை 5 மணி வரை) தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.