Saturday, June 3, 2023
Home » எப்போதும் துணையிருப்பான் அப்பிச்சி மாரய்யன்

எப்போதும் துணையிருப்பான் அப்பிச்சி மாரய்யன்

by kannappan

சிங்காநல்லூர், திங்களூர், ஈரோடுபக்திச் சிறப்புடைய கண்ணப்ப நாயனாரைக் குல முதல்வராகவும், காளத்தி மலைக்கு உரியவர்களாகவும் கூறப்படும் வேட்டுவ சமுதாயத்தினர் தங்கள் குல முன்னோரான அப்பிச்சிமாரய்யனைத் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ‘‘அப்பிச்சிமார் காவியம்’’ என்ற இலக்கியம் இவரது வரலாற்றை விரிவாகக் கூறுகிறது. கொங்கு 24 நாடுகளில் ஒன்றான வாழவந்தி நாட்டுப் பிள்ளைக்கரையாற்றூர் என்ற ஊரில் மாரய்யன் நல்லாட்சி புரிந்து வந்தார். அவருக்கு நான்கு தம்பியர். அவர்கள் சின்ன மாரய்யன், பிள்ளை மாரய்யன், உத்தண்டராயன், ஆவுடையான் ஆகியோர் ஆவர். அமைச்சர் கற்பகத்தான், போர்க்கலை வல்ல வீரமிக்க வேட்டுவர் சமுதாயம் பட்டாலி குல ராக்கியண்ணன், புலமையுடைய சிங்கக் கவிராசன், காவலர்களாகத் தனுக்காமன், பாதருகாரர் எனும் அரசமக்கள் ஆகியோர் அத்தாணி, மண்டபத்தில் வீற்றிருந்து அரசுக்கு உதவினர். கொங்கு வேளாளர்களில் பயிரகுல நல்லசாமனும், சாத்தந்தை குலச் சிவகுருநாதன் மகன் அர்த்தனாரியும், அவர் மனைவி மொய்யாண்டாயி ஆகியோரும் அவையில் இருந்தனர். மாரய்யன் பெரிய மாரய்யன் என்று அழைக்கப்பட்டார்.சகோதரர்கள் ஐவருக்கும் ஆண் மக்கள் எழுபது பேர். பெரிய மாரய்யனின் மூத்த மகன் பழனியப்பனுக்குக் கீரம்பூர் காட்டு வேட்டுவர் குல நாகமலையின் அண்ணன் பொன்னய்யன் மகள் காளியம்மையைத் திருமணம் செய்ய முனைந்தனர். பழனியப்பன் ‘‘நான் மட்டும் தனியாகத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நாங்கள்   சகோதரர்கள் எழுபது பேரும் ஒன்றாகத் திருமணம் செய்து கொள்வதாகச் சத்தியம் செய்துள்ளோம்’’ என்றார்.பூந்துறை நாட்டுக் காவிரிக்கரை ஓடப்பள்ளி வேட்டுவர் பலர் வாழும் பேரூர். ஆகையால் அங்கு சென்று பெண் கேட்டனர். அங்கு அரிச்சந்திர வேட்டுவர், காட்டு வேட்டுவர், புல்ல வேட்டுவர், புன்னாடி வேட்டுவர், பொன்ன வேட்டுவர், மணிய வேட்டுவர், வெந்த வேட்டுவர் குலம் சார்ந்த 11 பேர் வீட்டிலிருந்த 70 பெண்களை மணம் பேசினார். பெண் பேசி முடிப்பதில் ஆண்டாயி ( மொய்யாண்டாயி) பெரும் பங்கு வகித்தார்.     மணம் குறித்த நாளில் மணமக்களுக்குக் கங்கணம் கட்டிச் சுபச் சடங்குகள் முடித்து பெரிய மாரய்யன் குழுவினர் அனைவரும் விருந்துண்டு மகிழ்வாக ஓடப்பள்ளியில் இருந்தனர். தென் பூவாணி நாட்டில் ஆவணிப் பேரூரைத் தலைமை இடமாகக் கொண்டு பூவாணி வேட்டுவரில் போத்திராயன் என்பவர் ஆண்டு வந்தார். அவருக்கும் பூந்துறை நாட்டார்க்கும் பகை மூண்டு போர் நடந்தது. பூந்துறை நாட்டார் தோல்வியடைந்து பெரும் சேதத்துக்கு உள்ளாயினர்.பூந்துறை நாட்டார் சார்பில் போர்க்குறிக் காயத்துடன் ஒரு வீரர் வந்து ‘‘பெரிய மாரய்யனே அடைக்கலம், அபயம்’’ என்று கூறி நடந்தவற்றைக் கூறினார்.’’ மலைபோல் யாம் இருக்க இவ்வாறு நேரலாமா?’’ என்று கூறிய பெரிய மாரய்யன் குழுவினர் அனைவரும், 70 மணமக்கள் உட்படத் தங்கள் படையுடன்  போருக்கு எழுந்தனர். ஆலத்தூர் என்ற இடத்தில் பெரும்போர் நடைபெற்றது. கடும்போர் புரிந்து எதிரிகளை அழித்துப் பொரிய மாரய்யன் படையினர் அனைவரும் வீர மரணம் அடைந்தனர். காயம்பட்ட பெரிய மாரய்யன் போத்திராயனைக் கொன்று தானும் அர்த்தநாரீசுவரர் அருள் பெற்று அமரர் ஆனார். 70 மணமக்களில் சிலர் இறந்து போக, மற்றவர்கள் இனி நாமும் வாழ்வதில்லை என்று ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டு அனைவரும் மடிந்தனர். இதை அறிந்த 70 மணப்பெண்களும் கங்கணம் கட்டித் திருமணச் சடங்குகள் சில முடிந்துள்ள நிலையில் இனி நாம் வேறொருவரை மணம் செய்வதில்லை என்ற துணிவுடன் காப்பறாமலையின் மேல்புறம் காணாச்சுனை என்னும் கூப்பிடாச்சுனை அருகில் பெரிய குழி தோண்டிக் கட்டைகளை அடுக்கித் தீ வளர்க்க வேண்டும் என்றும் தாங்கள் அனைவரும் ஒன்றாகத் தீக்குழி பாய்ந்து வீரமாத்திகளாக முடிவு செய்திருப்பதாகவும் தங்கள் பெற்றோர்களிடமும்     சகோதரர்களிடமும் கூறினர். அவ்வாறே அவர்களும் செய்தனர்.     எழுபது பெண்களும் போர்க்களம் சென்று தங்களுக்கு நிச்சயித்த மணமகனின் தலையைத் தேடி எடுத்து ஒரு தட்டத்தில் ஏந்தி, அடுத்த பிறவியில் தாங்கள் கணவன் மனைவியாக அனுக்கிரகிக்க வேண்டும் என்று திருச்செங்கோட்டு அர்த்த நாரீசுவரரை நோக்கி வேண்டி நெருப்பில் குதித்து அனைவரும் வீரமரணம் எய்தனர். பிற்காலத்தில் வேட்டுவர் சமுதாயத்தினர் பெரிய மாரய்யனை ‘‘அப்பிச்சிமாரய்யன்’’ என்று கோயில் கட்டி வணங்கினர். திங்களூரிலும் அப்பிச்சிமாரய்யனுக்கு கோயில் கட்டப்பட்டது. அப்பிச்சிமாரய்யன் ‘‘வீரமிகு ரணசூர அப்பிச்சிமாரய்யன் ’’ என்று போற்றப்படுகிறார். திங்களூர்க் கோயிலில் அப்பிச்சிமாரய்யன், இராக்கியண்ணன், மசிரியம்மன் ஆகியோர் எழுந்தருளி அருட் பாலிக்கின்றனர். இக்கோயில் ஈரோடு மாவட்டம் திங்களூரின் வடமேற்கில் சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிங்காநல்லூரில் அமைந்துள்ளது.சு.இளம் கலைமாறன்படங்கள்: ரா. ஜோசப் ஆரோக்ய இன்பராஜா

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi