Wednesday, February 12, 2025
Home » எப்படி இருக்கிறது விமர்சனம்?

எப்படி இருக்கிறது விமர்சனம்?

by kannappan
Published: Updated:

நன்றி குங்குமம் தோழி எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரில் ஒருவர் நடித்த படம் திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தியேட்டரில் ஒரு கர்ப்பிணிக்கு இடுப்பு வலி ஏற்பட… அவள் கணவன் பாதியிலேயே மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறக்கிறது.பொதுவாக குழந்தைகளை விளையாட்டு சாமான்களை காண்பித்து தான் சமாதானப்படுத்துவார்கள். ஆனால், இந்த குழந்தையோ, அதை எல்லாம் ஓரங்கட்டிவிடுகிறது. மாறாக அவள் அழும் போது ரேடியோவை ஆன் செய்தா ேபாதும். அழகை மறந்து சிரிக்க ஆரம்பித்துவிடுவாள். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைன்னு சும்மாவா சொன்னாங்க. இந்த குழந்தையின் ரேடியோ பழக்கம் தான் அவள் வளர்ந்து, பிற்காலத்தில் அதே  துறையில் தனி முத்திரை பதிக்க காரணம். ரேடியோ வி.ஜே, தொலைக்காட்சி ஆர்.ஜே என பல நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக 11 வருடங்களாக பயணித்து வருகிறார் டோஷிலா.“பி.எஸ்.சி விஸ்காம், பிறகு எம்.ஏ மாஸ்காம் படிச்ச எனக்கு சூரியன் எப்.எம்-மில் ஆர்.ஜேவாக பணி செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கு தான் எனக்கான ஒரு அடையாளம் கிடைச்சது. அதற்கு பின் புதிய தலைமுறையில் கொஞ்சக் காலம் இருந்தேன். மீண்டும் எனது தாய் மடியான சன் குழுமத்தில இணைந்தேன். ஆர்.ஜேவாக இருந்த நான் சன் தொலைக்காட்சியில் திரைப்பட விமர்சனம் செய்தேன். அதன் மூலம் தனி அடையாளம் கிடைத்தது” என்றவரிடம் தற்போது திரைவிமர்சனத்தின் போக்கு எவ்வாறு இருக்கிறது என்று கேட்டதற்கு, “என்னைப் பொறுத்த வரை மக்களின் பல்ஸ், என்னுள் ஏற்படும் தாக்கம் மற்றும் அதில் உள்ள நிறை, குறை, நடிகர்களின் நடிப்பு, இயக்குநரின் பங்கு, படத்தில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் என அனைத்தையும் ஆய்வு செய்வேன்.சன்.டிவி போன்ற பெரிய நெட்வொர்க்கில் இருந்து வரும் விமர்சனத்திற்கு தனிச் சிறப்புண்டு. அதே சமயம் நல்லா இல்லாத படத்தை நல்லா இல்லைன்னு தான் சொல்லணும். அப்படி சொல்வதற்கு எனக்குத் தைரியம் கொடுத்தவர் மற்றும் உறுதுணையாக இருந்தவர் ராஜா சார்.ஒரு திரைப்பட விமர்சகர் ரசிகனாக இருக்கலாம். ஆனால் அவர் நேசிக்கும் திரைப்படங்களுக்கோ ஒழிய நடிகருக்கோ அல்லது இயக்குனருக்கோ ரசிகனா மாறிடக் கூடாது. அப்போதுதான் சரியான விமர்சனம் கொடுக்க முடியும். பாராட்டுடன் அதில் இருக்கும் குறையை சொன்னால் தான் அடுத்த முறை ஒரு இயக்குனரால் மெருகேற்றிக் கொள்ள முடியும். தமிழ்த் திரையுலகில் உள்ள 24 கிராப்ட் பற்றிய அறிமுகமும் அவசியம் என்று நினைக்கிறேன். இங்கு விமர்சனங்கள் தனிமனித தாக்குதலாக இருப்பது வருத்தமளிக்கிறது. ஒருவரின் உருவத்தை வைத்து கிண்டல் செய்கிறார்கள். சமீபத்தில் மஞ்சிமா மோகனை அவங்க உடல் அமைப்பை வைத்து சித்தி, பெரியம்மாவா நடிக்கலாம்ன்னு கிண்டல் செய்தாங்க. உலகத்தில் இருக்கும் பெரும்பான்மையான விஷயங்கள் சினிமாவில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. நல்ல படங்களுக்கு மத்தியில் மோசமான படங்களும் வெளியாகத்தான் செய்கிறது’’ என்றவர் ‘நாளைய இயக்குனர்’ நிழச்சி இவருக்கு ஒரு பாலமாக அமைந்ததாக தெரிவித்தார்.“நான் ஒரு சினிமா பைத்தியம். ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டுமென்றதும் எனக்க அவ்வளவு சந்தோஷம். இது ஒரு யுனிவர்சிட்டி. சினிமா கற்றுக் கொள்ளும் பலரில் எனக்கும் ஓர் வாய்ப்பு கிடைச்சதாக நினைச்சேன். நான் கதை எழுதுவேன். அதற்காக இயக்குனராகுவேனா என்று தெரியாது. ஆனால் சினிமா மீதான ஆசை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதில் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்ற டோஷிலா ‘‘காற்றின் மொழி’’ ஜோதிகாவாகவும் பரிணாமம் எடுத்துள்ளார்.‘‘ஹலோ எப்.எம்.மில் ‘சொல்ல மறந்த கதை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறேன். டி.வியில் இருந்து மறுபடியும் எப்.எம் ன்னு பலர் கேட்டாங்க. இந்த நிகழ்ச்சியில் வேலை பார்க்கும் அனுபவத்தை வார்த்தையால் சொல்ல முடியாது. அது ஓர் உணர்வு. உணர்ந்தால் தான் தெரியும். இதில் பலர் எனக்கு அழைத்து அவங்களின் மனக்குமறல்களை  சொல்வாங்க. அவங்களுக்கு பாசிட்டிவான பல விஷயங்களை பகிர்கிறேன். சமீபத்தில் காஞ்சிபுரத்திலிருந்து ஒரு பெண்மணி பேசினாங்க. அவங்களின் ஆறு வயது குழந்தைக்கு கேன்சராம். அவங்க குடும்பமே உடைந்துவிட்டது. என்னோடு பேசினாங்க. அவங்களுக்கு மனதைரியம் கொடுத்தேன். இப்ப அவங்களுக்குள் ஒரு தெம்பு வந்திருக்கு. தன் குழந்தைக்காக அந்த நோயை எதிர்க்க தயாராயிட்டாங்க. வாழ்க்கை என்பது… என்று தத்துவம் எல்லாம் பேசாமல் எதார்த்தத்தை மட்டுமே பேசுவோம். ஒருவரின் துன்பங்களை மறக்கடித்து பாசிட்டிவாக பேசுவது எனக்கு பிடித்திருக்கிறது’’ என்றவர் பெண்ணியம் பற்றியும் பேசுகிறார். ‘‘உலகத்தில் என்ன நடந்தாலும் ஜெயிக்க முடியும் என்று நினைப்பவள் நான். அதற்காக நான் பெண்ணியவாதின்னு சொல்ல மாட்டேன். என் வாழ்விற்குத் தேவையான அனைத்து வேலைகளையும் சுதந்திரமாக செய்து கொள்வேன். சுதந்திரமாக செயல்படுவதாக சொல்லி சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, ஆண்கள் போலவே உடை அணிவது பெண்ணியம் கிடையாது. வேலை, லட்சியம், உங்கள் மீதான நம்பிக்கை, ஆழமான காதல், கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்னு நிறைய இருக்கிறது. சின்ன வயசில்  அம்மா தினமும் இட்லி தான் தருவாங்க. நான் அவங்களிடம் சண்டை போட மாட்டேன். காரணம் அவங்களுக்கு பிடிச்ச வேலையை செய்யவிடணும். எனக்கு காலம் பூரா சமைப்பது அவங்க வேலை கிடையாது. இதைத்தான் பெண்ணியமா பார்க்கிறேன். வீட்டில் அட்ஜஸ்ட் பண்ணாம பெண்ணியம் பேசுவது பெண்ணியம் கிடையாது” என்ற டோஷிலா ரியாலிட்டி ஷோவை பற்றி பேச ஆரம்பித்தார்.“கலாய்க்கிறது, டபுல் மீனிங் ஜோக் சொல்வதை குறைக்கலாம்.  பொழுது போக்கான ஷோக்கள் அதிகம் இருக்கிறது. கொஞ்சம் தமிழ் சார்ந்தும், நம் கலாச்சாரத்தையும், கலைகளையும் நிகழ்ச்சிகளில் புகுத்தலாம். தமிழ் தமிழாகவே இல்லை” என்றவரிடம் உங்கள் துறையில் தனித்து தெரிவதற்கு அவர் மேற்கொள்ளும் சீக்ரெட் பற்றி கேட்டதற்கு, “நிறைய படிப்பேன். ஒரு விஷயத்திற்காக கடின உழைப்பை நம்புவேன். அதே போல் எந்த ஒரு குறுக்கு வழியிலும் சென்றதில்லை. என்னுடைய பலம் என்னவென்று எனக்கு தெரியும்.ஒரு நிகழ்ச்சியில் இயக்குநர் கொடுக்கக் கூடிய ஸ்கிரிப்ட்டோடு, அந்த நிகழ்ச்சியில் யாரை பற்றி பேசுகிறோம், அவர் பற்றிய புத்தகங்கள் மற்றும் இணையத்தில் இருந்தும் ரெஃப்ரன்ஸ் எடுப்பேன். என்னை பொறுத்தவரை எல்லா நிகழ்ச்சியும் பெரிய ஷோக்கள் தான். ஒழுங்கா பண்ணலைன்னா ஸ்ட்ரெஸ் ஆயிடுவேன். என்கிட்ட நிறைய பேர் சொல்வது,  உடையில் கவனம் செலுத்த சொல்றாங்க. நான் கொஞ்சம் ஓல்டு ஃபேஷனில் தான் இருப்பேன். எனக்கு இதுதான் கம்ஃபர்டபிள்” என்று கூறும் டோஷிலாவின் மறக்க முடியாத நிகழ்வு என்றால் இசைஞானி இளையராஜாவுடன் பணியாற்றியது என்கிறார். ‘‘அதிகம் பேசக்கூடாது, நல்லா தமிழ் பேசணும். பாடலுக்கு முன் கொஞ்சமா பேசனும். குறிப்பா நான்சென்ஸ் பேசக் கூடாதுன்னு ‘என்னுள்ளில் எம்.எஸ்.வி’ என்ற இளையராஜா சார் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளர் வேண்டும்ன்னு கேட்ட போது, என்னை பரிந்துரைத்தாங்க. என்னுடைய வயதிற்கு அது பெரிய விஷயம். இதே போல் ஒரு நிகழ்வில் மறைந்த இயக்குனர் மகேந்திரன் சார் ‘ரொம்ப அழகா பேசுனம்மா’ன்னு சொன்னது எனக்கான ஆசீர்வாதமாகப் பார்க்கிறேன்” என்றவர் இங்கு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கிடையாது என்கிறார். “மீடூ இயக்கத்தின் நோக்கம் சரியானது. ஒரு இடத்தில் உங்களுக்கு இடையூறு என்றால் அங்கிருந்து விலகிவிடுவது நல்லது. தனக்கு வரும் போதே குரல் எழுப்பினால், அவர்களுக்குப் பின் வரும் நூறு பேர் அதிலிருந்து காப்பாற்றப்படுவார்கள். ஆண்கள் எல்லோரையும் குற்றம் சொல்லிடமுடியாது. எனக்கு பெண்களை விட ஆண் நண்பர்கள்தான் அதிகம். அவர்களிடம் தான் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வேன். ஏதோ ஓரிடத்தில் மோசமான ஆட்களை உருவாக்கி வைத்திருக்கிறோம். இவர்கள் தங்களது ஆண், பெண் நண்பர்களிடம்  பிரச்சினைகளை தெளிவுப்படுத்தலாம். மன நல மருத்துவரை அணுகலாம். ஆனால் பலர் திருத்த முடியாத முற்றிய நிலையில் இருக்கிறார்கள். பிள்ளைகளின் மீது பெற்றோர்களின் பார்வை விழுந்து கொண்டே இருக்க வேண்டும். பிள்ளைகளும் பெற்றோர்களிடம் வெளிப்படையாக பேசுவதற்கான இடத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். ஒரே நாளில் யாரும் மாறிடமாட்டாங்க’’ என்றவருக்கு வெள்ளித்திரையில் தனக்கான ஒரு இடம் பதிக்க வேண்டுமாம். “வெள்ளித்திரையில் எனக்கான ஒரு இடம் பிடிக்க வேண்டும். அதற்காக தற்போது உழைத்து வருகிறேன். ‘ஆசம் மச்சி’ வீடியோவில், ‘எல்டர் கேர்ள் ஃபிரண்ட் டூ’ எபிசோட்டில் நடிச்சேன். எனக்கும் கொஞ்சம் நடிப்பு வருது. திரைப்படங்களில்  பெயர் எடுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை. இதுவரை நினைத்தது எல்லாம் போராடி சாதித்திருக்கிறேன். இதிலும் ஜெயிப்பேன்” என்றார் டோஷிலா.    தொகுப்பு: அன்னம் அரசு

You may also like

Leave a Comment

16 − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi