ஜோதிட முரசு மிதுனம் செல்வம்ஒருவரது ஜாதக கட்டத்தில் லக்னம் என்பது மிக முக்கியமான தாகும். அந்த லக்னத்தில் அதிபதி என்று சொல்லக்கூடியவர் லக்னாதிபதி ஆவார். இந்த லக்னாதிபதிதான் அந்த ஜாதகத்தை இயக்கும் அதிகாரம் பெற்றவர். ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி என்ற கிரகம் மிகவும் பலமாக இருப்பது மிகவும் அவசியம். லக்னாதிபதி பலமாக அமைந்தால் அந்த ஜாதகருக்கு இயல்பிலேயே சில சிறப்பம்சங்கள் அமைந்துவிடும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நெறிமுறையான வாழ்க்கை, பெருந்தன்மை, விட்டுக் கொடுக்கும் மனோபாவம், நற்சிந்தனைகள், தெய்வபக்தி, குடும்பப் பொறுப்பு என நல்ல குணாதிசயங்கள் இருக்கும். உயர்ந்த குறிக்கோள், லட்சியங்கள், நேர்மை போன்ற விஷயங்கள் எல்லாம் பலம் வாய்ந்த லக்னாதிபதியால்தான் தர முடியும். கவுரவம், மதிப்பு, மரியாதை, புகழ், செல்வாக்கு, பட்டம், கௌரவப் பதவிகள் எல்லாம் பலமிக்க லக்னாதிபதி மூலம் தான் கிடைக்கும். ஆகையால் லக்னாதிபதி ஒருவர் ஜாதகத்தில் பலமாக அமைவது அவரவர் பூர்வ புண்ணிய கர்மபலன் ஆகும். லக்னாதி பலம் என்பது அந்தந்த லக்னத்திற்கு கேந்திர ஸ்தானங்களான 1,4,7,10ல் இருப்பது அல்லது பஞ்சம, பாக்கிய ஸ்தானம் எனும் 5,9 ஆகிய இடங்களில் இருப்பது சிறப்பு. இரண்டாம் இடத்தில் லக்னாதிபதி இருந்தால் வாக்கு பலிதம் உள்ளவர், கை ராசிக் காரர் பேச்சாளர், சொற்பொழிவாளர், வார்த்தை வாய் ஜாலம் காட்டி புகழ் அடைவார்கள். வழக்கறிஞர்களாகவும், தத்துவ ஞானிகளாகவும் இருப்பார்கள். சங்கீதம், பாட்டு, பேச்சை மூலதனமாக வைத்து செய்யும் தொழில் எனப் பல வகையான திறமை, ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். ஒரு பெண்ணின் ஜாதக கட்டத்தில் இல்வாழ்க்கையை குறிக்கும் ஏழாம் இடத்தில் புதன், சனி இருவரும் சேர்ந்து இருந்தாலும், அல்லது இருவருடைய பார்வை ஏழாம் இடத்தில் பட்டாலும் நல்ல அமைப்பு கிடையாது. புதன், சனி இருவரும் நபும்ச(அலி) கிரகங்கள். அதாவது அலிக் கிரகங்கள் ஆகையால் கணவருக்கு இல்வாழ்க்கையில் சோர்வு உண்டாகும். ஆண்மைக்குறைவு, விந்தணு குறைவு இருக்கும். ஒருவருக்கொருவர் அன்யோன்ய அமைப்பு சரியாக இருக்காது. இருவரின் ஆசா பாசங்கள், ரசனைகள் எல்லாம் முரண்பாடாக இருக்கும். இதனால் ஏனோதானோ என்ற இல்லாத சுகம் இருக்கும். அதே போல் ஏழில் சூரியன் இருந்தாலும் கணவன், மனைவி இடையே இல்லற சுகம் கௌக்கியமாக இருக்காது. யாருக்காவது திருப்தி அற்ற நிலை இருக்கும். அதன் காரணமாக வெறுப்பு, விரக்தி இருக்கும். இந்த அதிருப்தி காரணமாக பல விஷயங்களில் ஒத்துப்போகாத தன்மை ஏற்படும். ஆகையால் ஜோதிடரிடம் ஜாதகப் பொருந்தம் பார்க்கும்போது. இந்த விஷயங்களை கவனமாக பார்ப்பது அவசியம். சூரியன் 2,7,8-ஆகிய ஸ்தானங்களில் இருந்தால் மற்ற கிரகநிலைகளை பார்ப்பது அவசியம். ஏதோ நட்சத்திரப் பொருத்தம் 7 இருக்கு, 8 இருக்கு என்று பார்த்து திருமணம் செய்வதால்தான் பிரச்னைகள் வருகின்றது. நட்சத்திரப் பொருத்தம் என்பதை ஒரு உப பொருத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். அதே போல் பெண்கள் ஜாதகத்தில் சுக்கிரன், கேது, சுக்கிரன், ராகு சேர்ந்து இருந்தால் எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப் பார்த்து முடிவு செய்வது இல்லற வாழ்க்கைக்கு இனிமை சேர்க்கும்.பெண்கள் ஜாதகத்தில் மிக முக்கியமான இடமான இரண்டாம் இடம் உள்ளது. இந்த வீட்டில் பல விஷயங்கள் இருந்தாலும் முக்கியமாக தனம், குடும்பம், வாக்கு, பெருந்தன்மை, சொல், செயல் ஆகியவற்றை குறிப்பிடுகிறது. ஆகையால் இந்த இரண்டாம் வீட்டில் நீசம் பெற்ற கிரகம் இல்லாமல் இருப்பது மிக மிக சிறப்பு, அதே போல் 6, 8, 12ம் அதிபதிகள் இருக்கக்கூடாது. ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது இது போன்ற முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். இரண்டாம் இடம் பாதிப்பு திருமண பொருத்தம் பார்க்கும்போது சாதாரணமாக நட்சத்திரப் பொருத்தம் எனும் 10-பொருத்தங்கள் பார்ப்பார்கள். இது ஓர் உப பொருத்தம் என்று சொல்லலாம். அதன் பிறகு ஜாதக கட்டத்தை பார்ப்பார்கள் அதில் யோக, தோஷ விஷயங்கள், ஆயுள், குழந்தை பாக்கியம் எல்லாம் பார்ப்பார்கள். பொதுவாக செவ்வாய் தோஷம் என்பது மிகவும் பிரசித்திப் பெற்றது.அனைவரும் அறிந்தது, அதே போல் நாகதோஷம் எனப்படும். ராகு – கேது தோஷம் ஏழாம் இடம், எட்டாம் இடம், இரண்டாம் இடம் போன்ற இடங்களில் இருந்தால் தோஷம் இந்த தோஷ அமைப்புக்களையும் பார்த்து அதற்கேற்ப ஆண், பெண் ஜாதகப் பொருத்தத்தை முடிவு செய்வார்கள். இப்படி பல விஷயங்களை பார்த்து திருமணம் செய்தாலும் குடும்பத்தில் பிரச்னை, நிம்மதியற்ற தன்மை, கருத்து வேறுபாடுகள், தற்கால பிரிவுகள், நிரந்தர பிரிவுகள் என வாழ்க்கைப் பாதை, திசைமாறி சென்றுவிடுகிறது இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமாக லக்கினத்திற்கு இரண்டாம் இடம் எனும் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தை சரியாக சீர்தூக்கி பார்க்காமல் திருமணம் செய்வதே முக்கிய காரணமாகும்.லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் ராகு, கேது, சூரியன், செவ்வாய் மற்றும் நீச்ச கிரகங்கள், 6,8,12ம் அதிபதிகள் இல்லாமல் இருப்பது உத்தமம். இரண்டாம் வீட்டிற்குடைய கிரகம் ராகு – கேதுவுடன் சேர்ந்தாலும். நீச்ச கிரகத்துடன் சேர்ந்தாலும், 6,8,12-ஆம் அதிபதிகளுடன் சேர்ந்தாலும். இல்லற வாழ்க்கையில் பிரச்னைகள் தொடரும். அந்தந்த ஜாதக தசாபுக்திகளுக்கு ஏற்ப பாதிப்புக்கள் இருக்கும். காதல், கலப்புத் திருமணங்களுக்கு இந்த இரண்டாம் இட பாதிப்புதான் முக்கிய காரணம். ஆகையால் இரண்டாம் இடம், இரண்டாம் அதிபதி, இரண்டாம் வீட்டை பார்க்கும் கிரகங்கள் இவற்றை கவனமாக பார்ப்பது அவசியமாகும். மண வாழ்வு லக்னத்திற்கு 7 ஆம் வீட்டிற்குரிய கிரகம் 8ல் இருந்தாலோ, 8 ஆம் வீட்டிற்குரிய கிரகம் 7ல் இருந்தாலோ. 6 ஆம் வீட்டிற்குரிய கிரகம் 7ல் இருந்தாலோ, 7 ஆம் வீட்டிற்குரிய கிரகம் 6ல் இருந்தாலோ மண வாழ்க்கை போராட்டமாக இருக்கும். திருப்தியில்லாத மனநிலை இருக்கும். இல்லற வாழ்வில் இன்பசுகம் கெடும். சாதாரண விஷயங்களில் இருந்து அதிமுக்கியமான விஷயங்கள் வரை கணவன், மனைவி இடையே எதிர்மறையான கருத்துக்கள் இருக்கும். ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலம் பாதிப்பு, மருத்துவச் செலவுகள், மனநலம் பாதிப்பு இருக்கும். ஏறினால் முழம் சறுக்கும் என்று சொல்வார்கள். அதற்கேற்ப சங்கிலித் தொடர்போல் ஏதாவது குழப்பங்கள், பிரச்னைகள், விரயங்கள் என வந்து கொண்டே இருக்கும். 12ல் சந்திரன் லக்னத்திற்கு 12 ஆம் இடம் என்பது விரைய ஸ்தானம், அயன, சயன போகஸ்தானம் ஆகும். இந்த இடத்தில் சந்திரன் இருந்தால் நிறைகுறைகள் இருக்கும். அந்தந்த லக்னத்திற்கு ஏற்ப பலன்கள் கூடும், குறையும். பொதுவாக இந்த இடத்து சந்திரன் அயன சயன சுகத்தை தருவார். நல்ல சுக போகியாக இருப்பார். பெண்களால் லாபம் அடைவார். இல்லற வாழ்க்கையில் போகசுகம் மிகுந்து இருக்கும். ஆட்சி, உச்சம் பெற்று இருந்தால் இரட்டிப்பு யோக பலன்கள் உண்டாகும். பெரிய கலாரசிகராக இருப்பார். எதையுமே ஒரு ரசனையுடன் அனுபவிப்பார். இவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பெண்களின் நட்பு தானாக வந்து சேரும். காதல், காம சுகத்தில் மூழ்கித் திளைப்பவர்கள். தீய பழக்க வழக்கங்கள் இவர்களை எளிதில் வந்து பற்றிக்கொள்ளும் கீழ்நிலைக்காதல், காமம், மேலான உன்னத காதல், காமம் இந்த இரண்டு விஷயமுமே சந்திரனின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. 12 ஆம் இடத்து சந்திரன் அதிக பயணங்களை ஏற்படுத்துவார். ஏதாவது ஒரு வழியில் பயணங்கள் இருக்கும். சிலருக்கு அந்த மாதிரியான தொழில், வியாபாரம் அமையும். இவர்கள் சர்வ சாதாரணமாக கடல் கடந்து சென்று வருவார்கள். வெளிநாட்டு தொடர்புகள் அதிகம் இருக்கும். அடிக்கடி மாதக் கணக்கில் அயல்நாடுகளில் தங்குவார்கள். வெளிநாட்டில் குடியுரிமை, வௌிநாட்டில் சொத்து வாங்குவது போன்ற அமைப்புக்கள் கூடி வரும். சமுக விரோத செயல்கள் ஒரு ஜாதகத்தில் மிகவும் முக்கியமான இடம் லக்னம், லக்னாதிபதி இந்த அமைப்பு நவாம்சத்திற்கும் பொருந்தும். ராசி கட்டத்தில் ஒரு கிரகம் பலம் குறைந்து இருந்து நவாம்சத்தில் பலம் பெற்றால் நவாம்ச பலம் காரணமாக அந்த கிரகத்திற்கு இரட்டிப்பு பலம் வந்து விடும்.லக்னாதிபதி, ராசி அதிபதி, சந்திரன் இந்த மூன்று கிரகங்களும் பலம் குறைந்து, நீசம் அடைந்து இருப்பது தோஷமாகும். மேலும் ஐந்தாம் அதிபதி பலம் குறைந்தால் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். மேலும் சந்திரன், லக்னாதிபதி, ராசி அதிபதி, ஐந்தாம் அதிபதிகளுடன் ராகு கேது சேர்வது நல்ல அமைப்பு கிடையாது. முதலில் சிறிய தவறுகள், பிரச்னைகள் என்று ஆரம்பித்து நாளடைவில் கொலை, கொள்ளை போன்ற கொடுஞ்செயல்களில் ஈடுபடுவார்கள். மேலும் தீய தசைகள் நடந்துகொண்டிருந்தால் இவர்களின் செயல்பாடுகளில் வீரியம் அதிகரிக்கும். ஒரு குழுவாக, கூட்டமாக சேர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவார்கள். அற்ப குற்றங்களில் ஆரம்பித்து அதி பயங்கரமான பாதகச் செயல்களை செய்வதற்கு தயங்க மாட்டார்கள். ராகு கேது புதன் ராகு, கேது, புதன் இந்த மூன்று கிரகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் சேர்ந்து இருந்தாலும், பார்த்தாலும் நிறைகுறைகள் இருக்கும். பொதுவாக கிரக சேர்க்கைகள் யோக , அவயோகத்தை தரும். புதன் கிரகம் அறிவு சார்ந்த கிரகம். ஒருவரின் நடத்தை, மனநிலை, பழகும் தன்மை போன்றவற்றை தருபவர். வித்தை, கல்விக்கு அதிபதி. மனம் சார்ந்த கிரகம். இந்த புதனுடன், ராகு, கேது சம்பந்தப்படும் போது மற்ற கிரகங்களின் பலம், ஜாதக அமைப்பு போன்றவை காரணமாக மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றுவிடும். ஜாதகர் எந்த துறையில் இருந்தாலும் அதில் உயர் உச்ச நிலையை அடைவார். இந்த மூன்று கிரகங்களும் எதிர்மறையாக வேலை செய்தால் பல வகையான சிக்கல்கள் உண்டாகிறது. முக்கியமாக மனக்குழப்பம், சஞ்சலம், சபலம் இருக்கும். தீய பழக்க வழக்கங்கள் எளிதில் வந்து பற்றும். இந்த முக்கூட்டுக் கிரகங்கள் இரண்டாம் இடம், ஏழாம் இடத்துடன் சம்பந்தப்படும் போது இல்லற வாழ்க்கை கேள்விக் குறியாகிறது. வயதில் மூத்த பெண்களுடன் தொடர்பு, அல்லது அவர்களை திருமணம் செய்து கொள்வது. விதவையைத் திருமணம் செய்வது. விவாகரத்து ஆன பெண்ணை திருமணம் செய்வது. தகாத தொடர்புகள் இருக்கும். முறை தவறிய கள்ளக்காதல் போன்றவை அமையும். இந்த அமைப்பு பெண்கள் ஜாதகத்தில் இருந்தால் அவர்களின் செயல்பாடுகளும் இந்த வகையில் தான் இருக்கும். கவனம் உஷார் – எச்சரிக்கை! ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி தசை, எட்டாம் அதிபதி தசை நடந்தால் மிகவும் நிதானமாகவும், கவனமாகவும் இருக்கவேண்டும். ஏழாம் அதிபதி எட்டாம் அதிபதி சேர்ந்திருந்து தசை நடந்தால் சில இழப்புக்கள் இருக்கும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலைகள் இருக்கும். பிரிவினை, வழக்குகளை சந்திக்க வேண்டியிருக்கும். நண்பர்களால் பிரச்னைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் பாதிப்பு, அறுவை சிகிச்சைகள், தொடர் மருத்துவ செலவுகள் ஏற்படும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் நஷ்டத்தை சந்திப்பார்கள். வாகன விபத்துக்கள், ரத்த காயங்கள், வீட்டிலேயே முடக்கப்படும் சூழ்நிலைகள் இருக்கும். நகைகள், பணம் தொலைந்துபோவதற்கும், திருடு போவதற்கும் வாய்ப்புள்ளது. ஜாமின், பஞ்சாயத்து, மத்தியஸ்தம் போன்றவற்றால் பிரச்னைகள் வரும். வண்டி திருடு போகும். அதனால் போலீஸ், இன்சூரன்ஸ் என்று அலைய வேண்டி இருக்கும். கணவன், மனைவி இடையே எப்போதும் ஒரு நிச்சயமற்ற தன்மை இருக்கும். தொட்டதற்கெல்லாம் பிரச்னைகள் வெடிக்கும். அல்லது இருவரில் ஒருவருக்கு தொடர் உடல் நலப் பாதிப்புக்கள் இருக்கும். அறுவை சிகிச்சைகள், மருத்துவ செலவுகள், மன உளைச்சல், கடன்கள் என போராட்டமான சூழ்நிலைகள் இருக்கும்….