சேலம், ஜூலை 10: சேலம் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில், என்சிசி மாணவர்களுக்கான வருடாந்திர பயிற்சி முகாம் நடந்து வருகிறது. புதுடெல்லியில் என்சிசி மாணவர்களுக்கான தால்சைனிக் முகாம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. குடியரசு தின அணிவகுப்பிற்கு இணையாக கருதப்படும் இந்த முகாம், நடப்பாண்டு அடுத்த மாதம் நடக்கிறது. இதனைடுத்து முகாமிற்கான என்சிசி மாணவர்கள் தேர்வு விரைவில் நடக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, திருச்சி, கோவை மற்றும் நெல்லை குழுவினர், மாநிலம் முழுவதும் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன்படி கோவை மண்டலத்திற்குட்பட்ட வீரர்களுக்கான சிறப்பு வருடாந்திர பயிற்சி முகாம், சேலம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் கடந்த இருதினங்களுக்கு முன்பு தொடங்கியது. வரும் 15ம் தேதி வரை நடக்கவுள்ள இந்த முகாமிற்கு, சேலம் 12 பட்டாலியன் கர்னல் ராகேஷ்மிஸ்ரா தலைமை வகித்து பயிற்சி வழங்கி வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை அரசுக்கல்லூரி என்சிசி அலுவலர் கேப்டன் விக்ரம் பிரசாத் செய்துள்ளார்.
இதில், கோவை குரூப்பை சேர்ந்த 108 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். முதற்கட்டமாக இவர்கள் தடை தாண்டும் பயிற்சி பெற்று வருகின்றனர். தொடர்ந்து இவர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி, மேப் ரீடிங், சுகாதார கல்வி, தூரத்தை கணித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.