திண்டிவனம், ஜூலை 5: என்எல்சி நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட கரிவெட்டி கிராம மக்களுக்கு நியாயம் கிடைக்காவிடில் போராட்டம் வெடிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நெய்வேலி என்எல்சி விவகாரத்தில் இழப்பீடு தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15 லட்சம் வீதம் 2022 லோக் ஆயுக்தா (மக்கள் நீதிமன்றம்) வாயிலாக சென்று மக்களுக்காக பெற்று தரப்பட்டதை அனைவரும் அறிவர். கரிவெட்டி கிராமத்தின் குடும்பங்கள் அனைத்தும் வறுமை கோட்டுக்கும் கீழேயுள்ள குடும்பங்கள். ஆனால் கருணைத் தொகையாக ரூ.10 லட்சத்தை யாருக்கு உயர்த்தி தந்தது என்.எல்.சி. நிர்வாகம் என்பதே இதில் முக்கியம்.
கரிவெட்டி கிராம மக்களுக்காக வழங்கப்பட்ட மாற்றுமனைகளும் என்எல்சி நிர்வாகம் அடுத்த கட்டமாக கையாண்ட விதமுமே முரண்பாடானவை. ஒரு குடும்பத்திற்கு ஒரு வாழ்வாதாரம், ஒரு மாற்றுமனை, ஒரு வேலை வாய்ப்பு மட்டுமே என்று கூறும் என்எல்சி நிர்வாகம், மாற்றுமனை வழங்குவதில் முதலில் முன் வைத்த வரைமுறைகள் அத்தனையும் தலைகீழாய் மாறியது கரிவெட்டி கிராமத்துக்கு மட்டும்தான். அந்த கிராமத்துக்கு எதிராகத்தான். என்எல்சி வேலைகளுக்கு ஆள் எடுப்பிலும் ஏமாற்று வேலைதான் நடந்திருக்கிறது. மாற்றுமனை, வீடு கட்ட பணம், கூடுதல் மதிப்பீட்டுத் தொகை, ஒதுக்கீடு பணிகளில் சார்புநிலை போன்ற எத்தனையோ விஷயங்களில் என்.எல்.சி. நிர்வாகம் கேடு செய்திருந்த போதிலும் கரிவெட்டி கிராம மக்கள் மனம் தளரவில்லை. தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். கரிவெட்டி மக்களின் நம்பிக்கையை என்.எல்.சி. நிர்வாகம் சீர் குலைக்குமானால், அவர்களுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் பாட்டாளி மக்கள் கட்சி, பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.