நெய்வேலி, ஜூலை 4: என்எல்சி அதிகாரி வீட்டில் 25 பவுன் திருடு போனதாக கூறியதால் போலீசார் சோதனையில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 27 அண்ணா சாலையில் உள்ள என்எல்சி குடியிருப்பில் வசித்து வருபவர் ஜெயபால் மகன் ஜெகன் (35). இவர் என்எல்சி பீல்ட் ஆபீசில் டிசியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் மற்றும் இவரது மனைவி இருவரும் சேர்ந்து உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு ஜவுளி எடுப்பதற்கு நேற்றுமுன்தினம் சேலம் சென்றுவிட்டு வீடு திரும்பினர். நேற்றுமுன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் என்எல்சி குடியிருப்பில் உள்ள தனது வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் வீட்டினுள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்து சுமார் 25 பவுன் தங்க நகை திருடு போனது தெரியவந்தது. மேலும் வீட்டிலிருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. இதுகுறித்து ஜெகன் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில், நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், நெய்வேலி தெர்மல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கபட்டு விசாரணை மேற்கொண்டு, வீடு மற்றும் அதன் சுற்றுப்புறம் முழுவதும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது வீட்டுக்கு அருகில் கிடந்த பையில் மாயமான நகை இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், நகைகளை திருடிய கொள்ளையர்கள், அதனை பையில் எடுத்து வைத்து செல்ல முயன்றுள்ளனர். அப்போது அங்கு வாகன சத்தம் கேட்டதால், அந்த பையை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர், என்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.