கோவை, ஜூன் 30: கோவை மாவட்டத்தில் 1,405 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகளுக்கு மாவட்ட அளவில் பூசாரிபாளையம், கவுண்டம்பாளையம், சூலூர் உள்பட பல்வேறு பகுதியில் உள்ள 10 குடோன்களில் இருந்து உணவு பொருட்கள் சப்ளையாகிறது. இந்த குடோன்களில் இருந்து உணவு பொருட்களை உரிய எடையில் கடைகளுக்கு சப்ளை செய்ய வேண்டும். ஆனால் ரேஷன் கடைகளுக்கு எடை குறைவாக ரேஷன் பொருட்கள் வழங்குவதாக புகார் எழுந்தது. கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கும் உணவு தானியங்கள் முறையாக வழங்காமல் முறைகேடு செய்வதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இதற்கு தீர்வு காணும் வகையில் எடை கருவியுடன் ‘புளூடூத்’ இணைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஒவ்வொரு உணவு பொருட்களும் தனித்தனியாக எடை போடப்பட்டு பொதுமக்களின் விரல் ரேகை பதிவுகள் பெறப்பட்டு வருகிறது. இதனால் எடை மோசடி, பொதுமக்கள் வாங்காமல் வாங்கியது போல் கணக்கு காட்டும் நடைமுறை தடுக்கப்பட்டது. அனைத்து பொதுமக்களும் உரிய எடையில் பொருட்கள் வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஒரு கிராம், ஏன் ஒரு அரிசிகூட குறையாது. இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தவறுகளை தடுக்கும் திட்டத்தால் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்பட்டு வருகிறது.