அம்பத்தூர்: அம்பத்தூரில் நேற்று மாலை மனிதநேய மக்கள் கட்சியின் 15ம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவரும் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா பங்கேற்று, பள்ளி மாணவர்கள் உள்பட 1000 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அம்பத்தூர் எஸ்டேட், முகப்பேர், மண்ணூர்பேட்டை ஆகிய பகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சியின் 15ம் ஆண்டு விழாவை முன்னிட்டு கட்சிக்கொடி ஏற்றுதல், பள்ளி மாணவர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மமகவின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ பங்கேற்று, ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேசுகையில், ‘ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து கடந்த சில நாட்களுக்கு முன் பிரசாரம் செய்தேன். எங்கள் கட்சியை சேர்ந்தவர்களும் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, அங்கு திமுக அரசுக்கு எதிராக எவ்வித எதிர்ப்பலைகளும் தென்படவில்லை. திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை வலுவாக உள்ளது. தமிழ்நாடு மக்களின் உரிமைகளை காவு கேட்கக்கூடிய ஒன்றிய பாஜவை சுமந்து வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு, இடைத்தேர்தல் பெரும் பின்னடவை ஏற்படுத்தும்’ என்றார்….