மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே புதுப்பிக்கப்பட்டு 2 ஆண்டுகளை கடந்தும் பூட்டியே இருக்கும் நூலக கட்டிடத்தை திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாமல்லபுரம் அடுத்த எச்சூர் ஊராட்சியில் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வசிக்கின்றன. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மந்தைவெளி தெருவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ஒரு நூலக கட்டிடம் கட்டப்பட்டது. மேலும், கட்டி முடிக்கப்பட்டு 7 ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்நிலையில், கட்டிடத்தில் சில பகுதிகள் சேதமடைந்து அலங்கோலமாக காணப்பட்டது. இதையடுத்து, பழுது பார்ப்பு பணிக்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.32 லட்சம் நிதி ஒதுக்கி, பழுது பார்க்கும் பணி நடந்து முடிந்தது. இந்நிலையில், 2 ஆண்டுகளை கடந்தும் நூலக கட்டிடம் திறக்காமல் வீணாக பூட்டு போட்டு பூட்டியே கிடக்கிறது. இதனால், மாணவர்கள் – பொதுமக்கள் அங்கு சென்று நூலக கட்டிடத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக தலையிட்டு மாணவர்கள் மற்றும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, உடனடியாக நூலக கட்டிடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….