வேலூர், ஜூலை 2: காட்பாடி ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 6 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். ஜார்க்கண்ட மாநிலம் டாடா நகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாவூர் வரை செல்லும் டாடா நகர் எக்ஸ்பிரஸ் ரயில், காட்பாடி ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்றுமுன்தினம் நள்ளிரவு வந்தது. முதலாவது பிளாட்பாரத்தில் நின்ற ரயிலின் பின்பக்க பொதுப்பெட்டியில், காட்பாடி ரயில்வே இன்ஸ்பெக்டர் சித்ரா உத்தரவின்பேரில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பெட்டியின் கழிவறை அருகே கேட்பாரற்ற நிலையில் ‘பேக்’ கிடந்தது. அதுபற்றி பயணிகளிடம் விசாரித்தபோது யாருடையது என்பது தெரியவில்லை. இதையடுத்து, அவற்றை போலீசார் கைப்பற்றி சோதனையிட்டதில், 6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த கஞ்சாவை கடத்தியவர்கள் யார்? எங்கு கொண்டுசெல்கின்றனர் என விசாரணை நடந்து வருகிறது.
எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 6 கிலோ கஞ்சா பறிமுதல் காட்பாடியில் நள்ளிரவு
0