குடியாத்தம், ஆக.31: குடியாத்தம் அடுத்த சீவூர் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவருக்கு செக் பவர் பறித்து கலெக்டர் உத்தரவிட்டார். குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள சீவூர் ஊராட்சி மன்ற தலைவராக தேமுதிக நிர்வாகியான உமாபதி என்பவர் பதவி வகித்து வருகிறார். அதேபோல் துணை தலைவராக அஜீஸ் என்பவர் உள்ளார். இந்நிலையில் இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. மேலும், அஜீஸ் மீது குட்கா விற்பனை சம்பந்தமாக பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் ஊராட்சிகளின் வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ள முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். அதனடிப்படையில் சீவூர் ஊராட்சியில் வரவு செலவு கணக்குகளை முழுமையாக தணிக்கை செய்து அறிக்கை ஒப்படைக்க குடியாத்தம் ஒன்றிய அதிகாரிகளுக்கு கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார். மேலும், நேற்று தலைவர் உமாபதி, துணைத் தலைவர் அஜீஸ் ஆகியோரின் செக் பவர் பறித்து கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், அத்தியாவசிய பணிகள் செய்ய வங்கி கணக்குகளை கையாள குடியாத்தம் ஒன்றிய ஊராட்சிகள் பிரிவு பிடிஓ வினோத்குமார், மண்டல துணை பிடிஒ ஆண்டவர் ஆகியோருக்கு செக் பவர் வழங்கப்பட்டுள்ளது.