காளையார்கோவில், ஆக.21: கீழக்கோட்டையில் தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் கொண்டாடப்பட்டது. காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்ற அறிவியல் மற்றும் கணித செய்முறை பயிற்சி நடைபெற்றது. ஆசிரியர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். ஆசிரியை கமலம்பாய் வரவேற்புரை ஆற்றினார்.
சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி மண்ணுக்கும் மக்களுக்கும் சேவை புரிந்த மருத்துவர் நரேந்திர தபோல்கர் நினைவு தினமானது தேசிய அறிவியல் மனப்பான்மை தினமாக ஏன்? கடைபிடிக்கப்படுகிறது என்பதை கூறி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 51A(H) அறிவியல் கண்ணோட்டம், அறிவியல் மனப்பான்மை பெறுவது அனைத்து குடிமக்களுடைய அடிப்படை கடமையாகவே வரையறை செய்யப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி சிறப்புரையாற்றினார்.
வானவில் மன்ற கருத்தாளர் ஜெயபிரியா தேசிய அறிவியல் மனப்பான்மை தின உறுதிமொழி கூற ஆசிரியர்கள் மாணவ,மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆகஸ்ட் மாதத்திற்கான நடமாடும் மெழுகுவர்த்தி நொதித்தல் செயல்பாடு, காகித ஹெலிகாப்டர் சுழல் எண் விளையாட்டு, ஸ்டார்ச் துகள்களின் மாற்றம் போன்ற எளிய ஆய்வுகளை செய்து காட்டியும் ஒவ்வொரு மாணவனுக்கும் செய்து பார்ப்பதற்கு வாய்ப்பும் வழங்கப்பட்டது. ஆசிரியர் ராஜபாண்டி நன்றி கூறினார்.