உளுந்தூர்பேட்டை, ஜூன் 16: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எ.குமாரமங்கலம் கிராமம். இக்கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை இந்த 2 அறைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதாக தகவலறிந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி மற்றும் சமையலர்கள் பானுமதி, நித்தியா ஆகியோர் சென்று பார்த்தபோது 2 அறைகளின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 3 மூட்டை அரிசி, 200 முட்டை, 8 கிலோ துவரம் பருப்பு, 5 கிலோ சேமியா மற்றும் 27 டம்ளர், 3 தட்டு, எண்ணெய் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்கள், உணவு பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதே பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வகுப்பறையில் இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து கல்வி உபகரணங்களை மர்ம நபர்கள் திருடிச்சென்ற நிலையில் மீண்டும் அதே பள்ளியில் உணவு பொருட்கள், பாத்திரங்கள் திருடிச்சென்ற சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.