ஊத்துக்கோட்டை, ஜூன் 6: ஊத்துக்கோட்டை-திருமழிசை நெடுஞ்சாலையில் 2.6 கி.மீட்டர் தூரத்திற்கு 4 வழிச்சாலையாக சாலை விரிவாக்கம் செய்ய ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் 6 மாதங்களில் நிறைவடைந்து சாலை பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். ஊத்துக்கோட்டையைச் சுற்றியுள்ள தாராட்சி, பேரண்டூர், பாலவாக்கம், பனப்பாக்கம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மாவட்ட தலைநகரமான திருவள்ளூர் செல்ல வேண்டுமானால் ஊத்துக்கோட்டை வந்து அங்கிருந்துதான் செல்ல வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், ஆந்திர மாநிலம் புத்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கடப்பா போன்ற பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் ஊத்துக்கோட்டை வழியாக திருவள்ளூர் சென்று அங்கிருந்து திருபெருமந்தூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு செல்லும். இதனால், ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதன் காரணமாக, சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் மேம்பாலத்தின் அருகில் இருந்து பெருஞ்சேரி வரை 2.6 கி.மீட்டர் தூரத்திற்கு 4 வழிச்சாலையாக சாலை விரிவாக்கம் செய்ய ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, பெருஞ்சேரி முதல் ஊத்துக்கோட்டை வரை சாலையோரத்தில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டன. தற்போது, போந்தவாக்கம் என்ற இடத்தில் சாலை விரிவாக்கத்திற்காக தார் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் 6 மாதத்திற்குள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, சாலை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ரூ.7.40 கோடியில் உயர்மட்ட பாலம்
திருத்தணியில் இருந்து பொதட்டூர்பேட்டைக்குச் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் திருத்தணி-பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையில், தெக்களூர் அருகே நந்தி ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, திருத்தணி-பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, கிராம மக்கள் சுமார் 10 கிமீ தூரம் சுற்றிக்கொண்டு சென்று வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நந்தி ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், மத்திய சாலை உட்கட்டமைப்பு மேம்பாடு நிதி திட்டத்தின் கீழ் ரூ.7.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நடைபெற்றது. இதில், எஸ்.சந்திரன் எம்எல்ஏ கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். பாலம் அமைக்கும் பணிகளுக்கு முன்னதாக, மாநில நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்றுவர ஏதுவாக தற்காலிக சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு வசதி ஏற்படுத்தப்படும் என்றும், தொடர்ந்து உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய உதவி பொறியாளர் தெரிவித்தார். நந்தி ஆற்றில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளதால், 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்